பெங்களூரு அருகே, 112 அடி ஆதியோகி சிவன் சிலையை திறக்க கர்நாடக உயர்நீதி மன்றம் அனுமதி.

பெங்களூரு அருகே உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் ,ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி ஆதியோகி சிவன் சிலையை திறக்க, கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கருதப்படும் பகுதிகளில் சிலை அமைக்கப்பட்டு கட்டப்பட்டதாக, ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு, ஆதியோகியின் திறப்பு விழா மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளை திட்டமிட்டபடி மேற்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியது.

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, காடுகள் அழிப்பு உள்ளிட்ட எதுவும் நடைபெறாது என மத்திய அரசு அளித்துள்ள உறுதிமொழியை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இதனடிப்படையில் இந்த சிலை ஜனவரி 15 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மற்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.