எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவரும் சரியான முறையில் கையாள வேண்டும்.
எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப் பொறுப்பு உள்ளது என்பதுடன் அப்பொறுப்பினை அவர்கள் சரியான முறையில் கையாளுவார்கள் என்று நம்புகின்றோம் என சர்வ மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள தமிழ்த்தரப்பினரின் பிரதிநிதிகள் எங்களுடைய நிலைப்பாட்டை வலுவாக முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். எந்தவொரு உத்தியோகபூர்வமான பேச்சுக்களும் ஆரம்பிக்க முன்னர் வடகிழக்கில் இராணுவ பலத்தை தற்போதைய மட்டத்தின் 25 வீதத்தால் ஆவது குறைத்து தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உரிய சட்டபூர்வமான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசானது தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும்.
எந்த உடன்பாடும் எட்டப்படுவதற்கு முன் வடகிழக்கின் இராணுவ எண்ணிக்கை 1983க்கு முந்தைய நிலைக்குக் குறைக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் உடனடி பிரச்சனையான இராணுவமயமாக்கலைக் குறைத்து அரசு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தாதவிடத்து பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அர்த்தம் அற்றது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
தமிழ்த் தேசிய இனப்பிரச்சனைக்கான எந்தவொரு நிரந்தர அரசியல் தீர்வுக்கும் சர்வதேசத்தினால் நடாத்தப்பட்டு கண்காணிக்கப்படும் பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் மக்களின் ஆணையைப் பெற வேண்டும். இதில் சர்வதேசத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இனப்பிரச்சனைக்கான தீர்வுகள் தெரிவுகளாக உள்ளடக்கப்பட வேண்டும். அவ்வடிப்படையிலேயே எந்த ஒரு முன்னெடுப்புக்களும் மேற்கோள்ளப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றோம் எனவும் சர்வ மத தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளன.