சரியான தலைவரிடம் நாட்டை ஒப்படைக்காவிடின் நிலைமை மேலும் மோசமடையும் – பொன்சேகா தெரிவிப்பு.
“சரியான தலைவரிடம் இனி நாட்டை ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்போதுள்ள பிரச்சினை மேலும் தொடரும். இப்போது இருப்பதைவிடவும் மோசமாக மாறும்.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“இராணுவத்தில் இருக்கும்போது என்னிடம் அதிக பலம் இருந்ததே. நான் எதுவும் செய்யவில்லையே. அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லையே. நான் நினைத்திருந்தால் நாட்டையே உலுக்கி இருப்பேன். நான் சட்டத்தின்படியே – ஜனநாயகத்தை மதித்தே செயற்பட்டேன்.
இராணுவத்தில் இருந்த ஒருவர் ஆட்சிக்கு வந்தால் அவர் துப்பாக்கி முனையில் மக்களைத் துன்பப்படுத்துவார் என்றா நினைப்பது? அமெரிக்காவில் ஐந்து இராணுவத் தளபதிகள் ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார்கள். அவர்கள் யாரும் மக்களைத் துன்பப்படுத்தும் விதத்தில் – இராணுவ சர்வாதிகாரியாகச் செயற்பட்டதில்லை.
ஒருவர் அதிகாரத்துக்கு வந்தால் அவர் முதலில் என்ன தொழில் செய்து கொண்டிருந்தாரோ அதையே ஜனாதிபதியாகியும் செய்வார் என்று நினைக்கலாமா? மக்கள் என்னைப் பார்த்துப் பயப்படுவார்கள் என்றால், அவர்கள் முதுகெலும்பில்லாத ஒருவருக்குத்தான் நாட்டை ஒப்படைக்க வேண்டி வரும்.
விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குபவர்களிடமும் – கஞ்சா வளர்ப்பவர்களிடமும் – போதைப்பொருள் வியாபாரிகளிடமும் – ஊழல்வாதிகளிடமும் – திருடர்களிடமும்தான் நாட்டை ஒப்படைக்க வேண்டி வரும். இதுவரை காலமும் நடந்தது அதுதான். அதனால்தான் இந்த நாடு இப்போது படுகுழியில் வீழ்ந்துள்ளது.
மக்கள் துன்பத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். மக்கள் இனியாவது சரியாக சிந்தித்து முடிவெடுத்தால் மாத்திரம்தான் நாடு தப்பும். அவர்களும் தப்புவார்கள்.
கோட்டாபயவை ஆட்சிக்குக் கொண்டு வந்து நன்றாகப் பட்டுவிட்டோம். நாம் செய்த தவறு என்னவென்று தேடிப் பார்த்துவிட்டோம். இதில் இருந்து பாடம் கற்பிக்க வேண்டும்” – என்றார்.