இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது-அமைச்சர் டயனா கமகே
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் எனவும், அதன் தாக்கத்தையும் நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்கள் தேர்தலை கோரவில்லை எனவும், எதிர்தரப்பினர் மாத்திரமே தேர்தலை கோருகிறார்கள் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்செய்கைளை சட்டபூர்வமாக்குமாறு நான் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஒரு சில அரச அதிகாரிகள் தவறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒருசில அரச அதிகாரிகள் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்கள்.
வீதி கடைகளில் விற்பதற்காகவும்,அனைவரும் வாங்கி பயன்படுத்துவதற்காகவும் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குமாறு கோரவில்லை.
வர்த்தக பயிராக அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். கஞ்சாவை பயன்படுத்துபவர்கள் பயன்படுத்துவார்கள், பயன்படுத்தாதவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
நாட்டு மக்கள் அனைவரும் சிகரெட் பாவிக்கவில்லை, அதுபோல் தான் இதுவும்.
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்காத தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம். இதனூடாக பல உற்பத்திகளை உருவாக்கலாம்.
இலங்கை மக்களின் வாழ்க்கையுடன் கஞ்சா தொடர்புப்பட்டுள்ளது. ஆதிகாலத்தில் இலங்கையர்கள் கஞ்சாவை உணவாக உட்கொண்டதுடன், புகைத்தலுக்கா பயன்படுத்தியுள்ளார்கள்.
தவறான சிந்தனைகள் மற்றும் முட்டாள்தனமான கருத்துக்களில் இருந்து வெளிவரும் வரை இந்த நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.