ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் அரசியில் கட்சிகளுக்குமிடையில் நாளை சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் அரசியில் கட்சிகளுக்குமிடையில் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளதாக அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பில் கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருந்தார்.
இந்த கூட்டத்தின் போது, விரைவில் தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடலை நடத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
இந்த பின்னணியில், நாளை ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புக்களிற்குமிடையில் சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை தீர்விற்கான பேச்சு முயற்சிகளை எவ்வாறு கையாள்வதென்பது தொடர்பாக நாளை ஆராய திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த கூட்டத்திற்கான அழைப்பு நேரகாலத்துடன் விடுக்கப்படாததால் நாளைய சந்திப்பில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்குமென தெரிகிறது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், கொழும்பை விட்டு புறப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த பின்னர் இன்றுதான் கூட்டம் பற்றி எம்.ஏ.சுமந்திரன் தொலைபேசியில் தகவல் தந்ததாக குறிப்பிட்டார்.
அதேபோல, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தனும் வடக்கிற்கு இன்று வந்த பின்னரே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதனால் மூன்று பேரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லையென்றும் தெரிவித்தார்.
நாளைய கூட்டம் உத்தியோகப்பற்றற்ற கூட்டமாகவே நடைபெறும் என்றும் தெரிவித்தார்.