சோதனையின் போது வருமானவரி அதிகாரி வெட்டிக் கொலை!
Kumarathasan Karthigesu
வருமானவரிச் சோதனை நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். பிரான்ஸின் வடக்கே Pas-de-Calais பகுதியில் Bullecourt என்ற கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலையைப் புரிந்தவர் எனக் கூறப்படுகின்ற நபர் பின்னர் தன்னுயிரை மாய்த்துள்ளார். பொது நிதி தொடர்பான காவல் பிரிவின்(head of the public finance brigade) அதிகாரியாகிய 43 வயது ஆண் ஒருவரே கொல்லப்பட்டவராவார்.
அவரும் கணக்காய்வாளரான பெண் ஒருவரும் இணைந்து அப்பகுதியில் பழைய பொருள்களை விற்கின்ற கம்பனி ஒன்றின் கணக்கு வழக்குகளைப் பரிசோதனை செய்யச் சென்றிருந்த சமயத்திலேயே இந்தச் சம்பவம் நேரிட்டது. கம்பனியின் உரிமையாளராகிய நபர் ஒருவருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் அந்த நபர் வருமான வரி அதிகாரியைக் கதிரை ஒன்றில் கட்டி வைத்துக் கத்தியால் பலமுறை வெட்டித் தாக்கிய பின்னர் தன்னுயிரையும் மாய்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.
வருமானவரித்துறை அதிகாரி கொல்லப்பட்ட செய்தி நேற்று மாலை நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. அதன் போது உறுப்பினர்கள் எழுந்து நின்று அவருக்கு ஒரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்தினர். பொதுக் கணக்குவழக்குகளுக்குப் பொறுப்பான அமைச்சர் (le ministre charge des Comptes publics) கப்ரியேல் அட்டால் கொலை நடந்த பகுதியில் உள்ள பொது வருமானவரித திணைக்களத்தின் தலைமைப் பணிமனைக்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.