பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்க சூழ்ச்சி.
பொலிஸு துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு செவிசாய்க்காத பொலிஸ் மா அதிபரை பதவி நீக்குவதற்கு சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக கோட்டா கோ கம போராட்டத்தில் முன்னின்று செயற்பட்ட சட்டத்தரணி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் அருட்தந்தை ஜீவந்த பீரிஸை கைது செய்யுமாறு அறிவுறுத்திய போதிலும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அந்த கோரிக்கையை நிராகரித்ததாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
தமது அறிவுறுத்தலுக்கு செவிமடுக்க மறுத்த பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்கி அந்த பதவிக்கு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்த பதவிக்கு நியமிக்க அமைச்சர் டிரான் அலஸ் முற்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலிஸ் மாஅதிபரை பதவி நீக்கும் சூழ்ச்சியின் பின்னணியில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் பங்கிருப்பதாக சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.