இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிகளை, ஓமான் கோடீஸ்வர்களுக்கு விற்றவர் கைது.
இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிகளை, சுற்றுலா விசாவின் ஊடாக, ஓமானுக்கு அழைத்துச் சென்று, அங்கு கோடிஸ்வரர்களுக்கு விற்பனைச் செய்த மனித கடத்தல்களில் ஈடுபட்டவர்களில் பிரதான சந்தேகநபர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சனிக்கிழமை (19) கைது செய்யப்பட்டார்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பிரகாரம், குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
44 வயதான இவர், மொஹமட் ரிஷ்வி மொஹமட் என்பவர் என அடையாளம் காணப்பட்டார். அவர், வத்தளை மற்றும் தெஹிவளையில் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருகின்றார் என்றும் அறியமுடிகின்றது.
அவரினால், கொழும்பு மருதானை பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அனுமதியற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் ஊடாக இளம் யுவதிகளை அவர், ஓமானுக்கு சுற்றுவா விசாவில் அனுப்பிவைத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் மூன்றாவது செயலாளர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டே இந்த மனித கடத்தல்களில் அவர் ஈடுபட்டுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.