ரணிலின் பொருளாதார திட்டத்திற்கு பாராட்டு.
“ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உக்கிரமடைந்துள்ள அரச அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் கோருகின்றனர்.”
எதிர்ப்பாளர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் நாட்டில் பொது இடங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில், இராஜதந்திர சமூகம், கருத்து சுதந்திரம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வமான வழிமுறைகள், மனித உரிமைகள் வழிமுறைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் தலையீட்டையும் கடிதம் பாராட்டியுள்ளது.
சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான அவரது திட்டம் குறித்து நேர்மறையான அணுகுமுறையைக் கொண்டுள்ளனர் என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். எவ்வாறாயினும், பொதுமக்களின் எதிர்ப்பையும், கருத்துச் சுதந்திரத்தையும், மக்கள் ஒன்றுகூடுவதையும் நசுக்குவதற்கு அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் அங்கீகாரம் வழங்க முடியாது என வெளிநாட்டு தூதரகங்களுக்கான கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியான காலப்பகுதியில் அரசாங்கம் தனது மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மீளாய்வு செய்யப்படவுள்ள GSP+ நிவாரணத்தை பாதிக்கும் சாத்தியம் குறித்தும் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
“தவறான தகவல், தகவல்களைத் திரிபுபடுத்தல் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் போராட்டங்களை குற்றச் செயல் என முத்திரை குத்தி பெரும்பாலும் இல்லாதபோகும் என எதிர்பார்க்கப்படும் GSP+ நிவாரண இழப்பின் பொறுப்பை போராட்டக்காரர்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் மீது சுமத்தும் அரசாங்கத்தின் முயற்சி ஆபத்தானது. பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த அதன் அடக்குமுறைக் கொள்கைகள், தண்டனையின்மை மற்றும் ஊழலை அரசாங்கம் ஒப்புக்கொண்டு விலகிச் செல்ல வேண்டும்.”
யுத்தம் நிறைவடைந்து 13 வருடங்களாக தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என மீண்டும் சுட்டிக்காட்டும் சிவில் சமூகம், மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை மீறும் நோக்கில் இந்தக் கொடூரச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்துகிறது.
குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை அடக்குவதற்கும், அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனக் குரல்களை நசுக்குவதற்கும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இதுவரை 127 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 11 பேர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. “
எனவே, இலங்கையின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கும் போராட்டத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.