உயர்தரங்களில் கணித பாடம் மீண்டும் கட்டாயமாகிறது
Kumarathasan Karthigesu
கணிதத்தை மேம்படுத்தும் ஆண்டாக 2023 அறிவிப்பு
பிரான்ஸில் அடுத்த கல்வியாண்டு (2023) தொடங்கும் போது lycéens என்கின்ற உயர்தர மாணவர்களுக்கு கணித பாடம் கட்டாயமாகின்றது.
உயர்தரம் முதலாவது ஆண்டு (classe de premiere) வகுப்பில் இருந்து கணிதத்தை விசேட பாடமாகக் கற்கத் தெரிவு செய்தவர்கள் தவிர்ந்த ஏனைய சகலருக்கும் வாராந்தம் ஒன்றரை மணிநேர கணிதபாட போதனை கட்டாயமாகும் என்று கல்வி அமைச்சு விடுத்துள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. உயர்தர ஆண்டுகளில் கணித பாடம் கட்டாயம் அல்ல என்ற தீர்மானம் கடந்த 2019 இல் அப்போதைய கல்வி அமைச்சர் கொண்டு வந்த சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வந்தது. இப்போது மீண்டும் அது கட்டாயமாக்கப்படுகிறது.
அதன்படி ஆறாவது தரத்தில்(sixième) இருந்து மாணவர்கள் அனைவரும் மேலதிக நேர கணித பாட வகுப்புக்குச் சமூகமளிக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது.
பிரான்ஸ் அதன் கணித அறிவுப் பாரம்பரியத்தை இழந்து வருகிறது என்ற கவலைகள் கல்வி நிபுணர்களிடம் காணப்படுகிறது.
அதனால் தற்போதைய கல்வி அமைச்சர் பேயாப்பே என்டியே (Pap Ndiaye) 2023 ஆம் ஆண்டைக் “கணிதத்தை மேம்படுத்துகின்ற” ஆண்டாகப் (“the year of promotion of mathematics”) பிரகடனம் செய்துள்ளார்.
மாணவர்களது கணித அறிவு மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்துள்ளதாகச் சமீபகாலத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. அதேசமயம் இங்கே கல்வி கற்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பொதுவாகக் கணித அறிவில் உயர் நிலையில் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. அண்மையில் பெரும் எண்ணிக்கையில் அகதிகளாக நாட்டுக்குள் வந்த உக்ரைன் சிறுவர்கள் வகுப்பறைகளில் கணித பாடத்தில் திறமைசாலிகளாக உள்ளனர் என்று தகவல் வெளியாகியிருந்தது.
கணிதத்துக்கான நோபல் பரிசு (“Nobel for maths”) என்று கருதப்படக் கூடிய “Fields medal” என்னும் கணித அறிவுக்கான உயர் பதக்கங்களை பிரான்ஸைச் சேர்ந்த 13 பேர் கடந்த காலங்களில் வென்றுள்ளனர். அத்தகைய கணித பாரம்பரியம் மிக்க நாட்டில் கணித பாடத்தை ஒழுங்காகக்கற்கின்ற மாணவர்களது வீதம் மிகப் பெரும் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மூன்றாவது ஆண்டு வகுப்பில் (classe de troisième) நான்கில் ஒரு பங்கு மாணவர்களே கணிதத்தில் நல்ல பெறுபேற்றைக் காட்டுகின்றனர்.