நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி.

நேற்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் அயல்நாட்டு தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்க்கு அமைச்சர் பதில் அளித்தார். வெளிநாட்டில் வேலை தேடி செல்லக்கூடிய தமிழர்களின் பாதுகாப்பு குறித்த உரிய சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறினார்.மேலும், போலியான ஏஜெண்டுகள் மூலமாக வெளிநாடு வேலைக்கு செல்வோர்கள் மட்டுமே வெளிநாட்டில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரவழைக்க உரிய நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மூலமாக மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.படித்த இளைஞர்கள் வெளிநாடு வேலைக்கு செல்லும் போது என்ன வேலைக்கு செல்கிறோம்? என மற்ற விவரங்களை அறிந்து கொண்டு தான் வெளிநாடு செல்ல வேண்டும் என குறிப்பிட்டார். நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் பற்றி பேசும் போது, அந்நாட்டில் சிக்கியுள்ளவர்களின்  ஆவணங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் நைஜீரியாவில் சிக்கியுள்ள தமிழர்கள் மீட்கப்படுவார்கள் என்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதியளித்தார்.