பூமி வெப்பம் : பறவைகள் வலசை போவது தாமதம்!
Kumarathasan Karthigesu
“பறவைகள் தங்கள் காலங்களை இழக்கின்றன.” ஆண்டுதோறும்குளிர்காலம் நெருங்கும் போது வெப்ப வலயங்களுக்கு இடம்பெயர்கின்ற ஐரோப்பியப் பறவை இனங்கள் இம்முறை தங்கள் பயணங்களைத் தாமதப்படுத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது. பூமி வெப்பமடைதலின் நேரடி விளைவு இது என்ற சூழலியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோடை காலத்தில் பிரான்ஸின் தென் பகுதிகளுக்கு வந்த பறவை இனங்கள் தங்களது வதிவிடப் பிரதேசங்களுக்கு இன்னமும் திரும்பிச் செல்லவில்லை.ஆபிரிக்காவுக்குத் திரும்பியிருக்க வேண்டிய சுமார் ஆயிரம் நாரைகள் இன்னமும் மத்தியதரைக் கடல் பகுதியை அண்டிய பிரதேசங்களில் தங்கியுள்ளன. கடும் குளிரில் சிக்கிப் பறக்க முடியாத ஆபத்தை அவை எதிர்கொள்ள நேரிடலாம்.
இலை உதிர் காலம் தொடங்குதற்கு முன்னராகக் கடந்த சில வாரங்களாக நீடித்த அதிக வெப்பம் பறவைகளது காலச் சுற்றோட்டங்களில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. தொலைதூரங்களில் இருந்து வந்த பட்சிகள் நாட்டின் பல பகுதிகளில் இன்னமும் காணப்படுகின்றன. அது வழக்கத்துக்கு மாறானது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பறவைகள் குளிர் காலம் நெருங்குவதை உணராமல் தொடர்ந்தும் இங்கே தங்குவது அவற்றின் வாழ்வுக் காலச் சக்கரத்தில்-இனப்பெருக்கங்களில் – பலத்த தாக்கங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
“பறவைகளின் மூளையில் ஒரு வகையான காலக் கடிகாரம் உள்ளது.அது கூடு கட்டும் இடங்களுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை அவற்றுக்கு உணர்த்தும். காலநிலைப் பிறள்வுகளால் அந்தக் காலக் கடிகாரம் ஒழுங்கற்றுப் போகிறது…”
-இவ்வாறு விளக்குகிறார் பிரான்ஸின் தெற்கே ஒக்ஸிட்டானி (Occitanie) பிராந்தியப் பறவைகளைப் பாதுகாக்கும் அமைப்பைச்(League for the Protection of Birds) சேர்ந்த பியர் மைக்ரே (Pierre Maigre).
பிரான்ஸில் ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட வழமைக்கு மாறான வெப்பம் காரணமாகக் குளிர் குறைந்து காணப்பட்டது. இதனால் தாவரங்களது வாழ்க்கைச் சுழற்சியும் (plant life cycles), பறவைகளது இடம்பெயர்வும் (bird migration) சீர்குலைந்துள்ளன. குறைவான குளிர்காலம் தாவரங்களின் ஒட்டுண்ணிச் (பூச்சிகள், பூஞ்சை) சுமையை (parasitic load) அதிகமாக்கி உள்ளது.
அதனால் அவை பலவீனமடைந்துள்ளன. பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சி இனங்கள் பல இலையுதிர்காலத்தில் பெருகியுள்ளன.அதன் மற்றொரு விளைவாக நுளம்புப் பெருக்கமும் ஏற்பட்டுள்ளது.