பாலியல் புகாரில் கைதான இலங்கை கிரிக்கெட்ட வீரர் குணதிலகா: அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து நீக்கம்.
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று இரவு சிட்னியில் உள்ள சில்வ வோட்டர் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி கிழக்கு ரோஸ் பே பகுதியைச் சேர்ந்த 29 வயதான யுவதியொருவர் பாலியல் வன்கொடுமை தொடர்பில் செய்த முறைப்பாட்டின் பேரில் இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்று அதிகாலை 01 மணியளவில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனுஷ்க குணதிலக்க சிட்னி சிற்ரி பொலிஸாரால் 04 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் பேரில் நேற்று பரமட்டா பொலிஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதிலும், பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சிட்னியில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனுஷ்க குணதிலக்க பொலிஸாரால் இன்று இரண்டாவது தடவையாக காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.தனுஷ்கவின் கைகளில் கைவிலங்குகள் போடப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதவான் றொபர்ட் வில்லியம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனுஷ்க சார்பில் சட்டத்தரணி ஆனந்த அமர்நாத் பிணை கோரியிருந்தார். எவ்வாறாயினும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் அண்மைக்காலமாக கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் வெளிநாட்டவர் என்பதால் தனுஷ்கவிற்கு பிணை வழங்க நீதவான் மறுத்துள்ளார்.
அதன்படி தனுஷ்க 05 நாட்களுக்கு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இது தொடர்பில் உயர் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்யவுள்ளதாக தனுஷ்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.