மியான்மாரில் இடம்பெயரும் இலட்சக்கணக்கான குழந்தைகள்!
மியான்மாரில் இடம்பெயர்ந்துள்ள பல குடும்பங்கள் காடுகளில் தற்காலிகத் தங்குமிடங்களில் வாழ்கின்றனர் என்றும், பசி, நோய், கடத்தல் மற்றும் சுரண்டல் போன்ற பல்வேறு ஆபத்தான பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர் என்றும், நவம்பர் 1, இச்செவ்வாயன்று அந்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இந்த அரசியல் நெருக்கடி மற்றும் வன்முறை அதிகரிப்பு தொடங்கி ஓர் ஆண்டு கடந்துள்ள நிலையில் 1,50,000 குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும் இந்தப் புள்ளிவிவரங்கள் உலகிற்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளன என்றும், உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவரும் நிலையில், மியான்மாரின் குழந்தைகளை மறக்கக்கூடாது, ”என்றும் கூறியுள்ளார் Save the Children அமைப்பின் ஆசியத் திட்ட இயக்குனர் Olivier Franchi
இதற்கிடையில் தென்கிழக்கு ஆசிய நாட்டில் மனித உயிர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் புனிதத்தன்மையை மதிக்க வேண்டும் என்று மியான்மர் ஆயர்களும் இராணுவ ஆட்சியாளர்களுக்குப் பலமுறை அழைப்பு விடுத்துள்ளனர்.
அக்டோபர் 31, இத்திங்களன்று, தான் வெளியிட்ட காணொளிச் செய்தி ஒன்றில், கைவிடப்படல், நாகரிகமற்ற நிலை, வறுமை மற்றும் மோதல்களால் துன்பப்படும் குழந்தைகளுக்காக இறைவேண்டல் செய்யுமாறு கத்தோலிக்கர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் குழந்தைகள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல, ஆனால் கடவுள் அவர்களுக்குக் கொடுத்த பெயர்கள் மற்றும் அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள் என்று வலியுறுத்தியது மிகவும் குறிப்பிடத்தக்கது
மியான்மாரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியிலிருந்து இதுவரை 2,400-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும், 16,000-க்கும் அதிகமான மக்கள் இராணுவ ஆட்சியினால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன (UCA)