இரட்டை பிரஜா உரிமை உடையவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச்செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது
பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு எதிராக யாரும் நீதிமன்றம் செல்லாவிட்டால் அது தொடர்பில் தீர்மானம் எடுக்க யாருக்கும் முடியாது. அதனால் எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 21ஆம் திருத்தம் மூலம் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாது என தெரிவிக்கப்படுகின்றபோதும் அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதை தடுக்கும் வகையில் அரசியல் யாப்பில் உள்வாங்க வேண்டும் என மக்களே தெரிவித்து வந்தனர். ஏனெனில் நாட்டுக்கு ஏற்பட்ட பாரிய அழிவே, மக்கள் இவ்வாறான தீர்மானத்துக்கு வர காரணமாகும்.
பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை அனுதித்துக்கொள்ளும் போது பொதுஜன பெரமமுனவுக்குள் கருத்து முரண்பாடு வருவதற்கு காரணமாக இருந்ததும் இந்த இரட்டை பிரஜா உரிமை விடயமாகும்.
அதனால் பசில் ராஜபக்ஷ்வுடன் நெருங்கிய தொடர்புடைய அவருடைய தீர்மானத்துக்கு மாத்திரம் அமைய செயற்படும் சிலர் இதனை தவிர்ப்பதற்கு ஆரம்பத்தில் இருந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். அவர்கள்தான் 22ஆம் திருத்த சட்டமூலத்துக்கு வாக்களிக்காமல் இருந்தனர்.
அத்துடன் அதிகமான நாடுகளில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு பாராளுமன்றத்தில் உறுப்பினராக முடியாது. ஏனெனில் மாறுபட்ட இரண்டு உரிமைகள் இருக்கும்போது, அவர் தனது குடும்பத்தினர் வசிக்கும் நாட்டை பாதுகாக்கவே நடவடிக்கை எடுப்பார் என்ற காரணத்துக்காகவாகும். போடிரஸ் ஒப்பந்தத்தின் போது பசில் ராஜபக்ஷ் நடந்துகொண்ட விதத்தை நாங்கள் அதனை கண்டோம்.
மேலும் தற்போது பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் யாரும் இருந்தால், அவர்களுக்கு எதிராக யாரும் நீதிமன்ற செல்லாவிட்டால் அவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியும்.
ஏனெனில் யாரும் இதுதொடர்பான விடயத்துக்காக நீதிமன்றத்துக்கு செல்லாவிட்டால், அதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள யாரும் இல்லை. எவருடைய பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச்செய்ய நீதிமன்றத்துக்கு அல்லாமல் பாராளுமன்றத்துக்கோ சபாநாயகருக்கோ அதிகாரம் இல்லை. என்றாலும் இதுதொடர்பாக இந்த சட்டத்துக்கு அமையவே தற்போதைய தேர்தல் சட்டத்துக்கு முறையான திருத்தம் கொண்டுவந்திருந்தால் இவ்வாறான பிரச்சினை எழுவதில்லை. அதனால்தான் எதிர்காலத்தில் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றார்.