காடுகளைக் காக்க வன வானிலை முன்னறிவிப்பு நிலையம்.
Kumarathasan Karthigesu
ஒரு பில்லியன் மரம் நடும் திட்டம் மக்ரோன் அறிவிப்பு.
பிரான்ஸின் வனப் பிரதேசங்கள், தாவர இனங்களை இயற்கை மற்றும் மனிதரால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் வன வானிலை முன்னறிவிப்பு (“météo de la forêt”) காட்டுத் தீ வானிலை முன்னறிவிப்பு (“météo des feux de forêts”) என்ற இரண்டு காலநிலை எதிர்வு கூறல் முறைமைகளை அரசு உருவாக்கவுள்ளது.
காட்டுத் தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட்ட சிவில் பாதுகாப்பு அமைப்புகளது பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அதிபர் மக்ரோன் இத்தகவலை வெளியிட்டிருக்கிறார். கடந்த வெள்ளியன்று எலிஸே அரண்மனையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
வன வானிலை முன்னறிவிப்புத் திட்டம் காட்டுப் பகுதிகளைத் தீ உட்பட அழிவுகளில் இருந்து பாதுகாப்பதற்கு உதவும். அதேசமயம் வனத் தீ முன்னறிவிப்பு காடுகளில் எங்கு தீ பரவக் கூடிய ஆபத்து ஏதுநிலை காணப்படுகிறது என்பதை அடையாளங்கண்டு முன்னறிவித்துத் தீயைத் தடுக்கவும் அதிலிருந்து அயல் பிரதேசங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் என்று மக்ரோன் அங்கு தெரிவித்தார். அடிக்கடி ஏற்படுகின்ற காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய உத்திகள் அவசியம் என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் திறம்பட போராடுதல், தீயணைப்பு வசதிகளைப் பெருக்குதல், காடுகளை மீள்நடுகை செய்து நிர்வகித்தல் என்ற மூன்று விதமான வழிகளைத் திட்டமிடவேண்டும் என்று கூறினார்.
தேசிய வனத் திணைக்களமும் காலநிலை அவதான மையமும் புதிய முன்னறிவிப்புத் திட்டத்தில் இணைந்து செயற்படும் என்றும் மக்ரோன் குறிப்பிட்டார். தீயணைப்புப் படை மற்றும் தீயணைப்பு மீட்புப் படைகளுக்கு அடுத்த ஆண்டு 150 மில்லியன் ஈரோ நிதி உதவியை அரசு அறிவித்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் அடுத்த பத்து ஆண்டுகளில் ஒரு பில்லியன் மரங்களை நடுகை செய்கின்ற பெரும் திட்டம் ஒன்றையும் அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த கோடை காலப் பகுதியில் என்றும் இல்லாதவாறு பரவிய காட்டுத் தீ நாட்டின் இயற்கை வனப் பகுதிகள் உட்பட தாவரக் காடுகளில் பெரும் பாகத்தை அழித்து நிர்மூலமாக்கியது. கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீ அனர்த்த அழிவுகளின் பத்து மடங்கு பேரழிவு இந்த ஆண்டின் கோடை காலப் பகுதியில் மாத்திரம் நிகழந்திருப்பது கவனிக்கத்தக்கது. பிரான்ஸின் பல பகுதிகளிலும் 72 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்த வனப்பிரதேசத்தைத் தீ விழுங்கியுள்ளது.