பிரிட்டிஷ் கடற்படையே வாயுக் குழாய்களை தகர்த்தது! – ரஷ்யா
Kumarathasan Karthigesu
அண்மையில் பால்டிக் கடலின்(Baltic Sea) ஆழத்தில் அமைந்திருந்த நோட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய்களில் ஏற்பட்ட வெடிப்புகளுடன் பிரிட்டிஷ் கடற்படைக் குழு ஒன்று தொடர்புபட்டுள்ளதாக மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது.
ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் இத்தகவலை இன்று வெளியிட்டிருக்கிறது.
ரஷ்யாவின் இயற்கை எரிவாயுவை ஐரோப்பாவுக்கு எடுத்துவருகின்ற நோர்ட் ஸ்ட்ரீம் – 1மற்றும் நோட் ஸ்ட்ரீம் – 2 ஆகிய இரு கடலடிக் குழாய்களும் செப்டம்பர் 26 ஆம் திகதி மர்மமான முறையில் இடம்பெற்ற வெடிப்புக்களினால் சேதமடைந்தமை தெரிந்ததே. அதனை ஒரு சர்வதேச பயங்கரவாதச் செயல் என்று ஆரம்பத்தில் கூறியிருந்த ரஷ்யா அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. பிரிட்டிஷ் றோயல் கடற்படையின் குழு ஒன்றே
திட்டமிட்டுக் குழாய்கள் மீதான தாக்குதலைச் செயற்படுத்தி உள்ளது என்று தற்போது மொஸ்கோ குற்றம் சுமத்தியுள்ளது. இந்தக் குற்றச் சாட்டுக்கு ஆதாரமான எந்தத் தகவலையும் அது வெளியிடவில்லை.
மொஸ்கோவின் இந்தக் குற்றச் சாட்டுக்கு லண்டனின் பிரதிபலிப்பு எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
டென்மார்க் மற்றும் சுவீடன் கடற் பகுதியை அண்டிய ஆழ் கடலிலேயே குழாய்கள் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டிருந்தன. அது தொடர்பான விசாரணைகளில் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட இவ்விரு நாடுகளும் மறுத்து விட்டன.
இதேவேளை, கிறீமியா குடாவின் பெரிய துறைமுக நகரமகிய செவஸ்டோபோல்(Sevastopol) மீது இன்று சனிக்கிழமை தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. உக்ரைனின் ட்ரோன்கள் பலவற்றைத் தடுத்து அழித்து விட்டதாக ரஷ்யா முதலில் கூறியிருந்த போதிலும் அதன் கடற்படைக் கப்பல் ஒன்று தாக்குதலில் சிக்கி சேதமடைந்ததாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு பின்னர் தெரிவித்திருக்கிறது.