“அழுக்குக் குண்டு” உக்ரைன் வீசுமாம்! நட்பு நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை!!

Kumarathasan Karthigesu

சீனாவுக்கும் ரஷ்யா செய்தி குழப்பத்தில் மேற்கு நாடுகள்.

“அழுக்குக் குண்டு” (dirty bomb) ஒன்றை வெடிக்கச் செய்ய உக்ரைன் ஆயத்தமாகி வருகிறது என்று மொஸ்கோ விடுத்த எச்சரிக்கை மேற்கு நாடுகள் மத்தியில் பலத்த சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

இவ்வாறான பீதியூட்டும் பேச்சுகள் மூலம் போரைத் தீவிரமாக விரிவுபடுத்துவதற்குரஷ்யா முயற்சிப்பதாக அந் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ரஷ்யா தானே இதுபோன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டம் தீட்டிவிட்டு எதிர்த்தரப்பு மீது குற்றம் சுமத்த முயற்சிக்கிறது என்று உக்ரைன் அரசுத்தலைமை அழுக்குக் குண்டுக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்தக் குற்றச்சாட்டை”அபாண்டமான பொய்” என்று அமெரிக்காவும் அடியோடு நிராகரித்திருக்கிறது.நியூயோர்க்கில் நேற்றிரவு நடைபெறவிருந்த ஐ. நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலிலும் இந்த “அழுக்குக் குண்டு” விடயம் ரஷ்யப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது .

அதிபர் விளாடிமிர் புடின் சில முன்னாள் சோவியத் நாடுகளின் உளவுத் துறைத் தலைவர்களோடு நடத்திய சந்திப்பின் போது உக்ரைன் அழுக்குக் குண்டுகளை வீச ஆயத்தமாகி வருகிறது என்ற எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

“உலகம் முழுவதும் மோதல் அபாயம் அதிகளவில் உள்ளது” அதனால் “முக்கியமான உட்கட்டமைப்புகளது பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும் “என்றும் புடின் அந்தக் கூட்டத்தில் நட்பு நாடுகளை எச்சரித்தார் என்று ரொய்ட்டர் செய்தி ஒன்று தெரிவித்துள்ளது. இதேவேளை, போரில் உக்ரைன் அழுக்குக் குண்டுகளைப் பயன்படுத்தப் போகிறது என்ற தகவலை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu) சீனாவுக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா திடீரென இவ்வாறு அழுக்குக் குண்டுப் பீதியைப் பரப்புவதன் உள் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.அது தானாக முந்திக் கொண்டு அழுக்குக் குண்டுகளைப் பயன்படுத்த முயற்சிக்கலாம் என்றே உக்ரைன் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

“அழுக்குக் குண்டு” என்றால் என்ன?

அழுக்குக் குண்டு(Dirty bombs) என்பது அணு குண்டு அல்ல. வழக்கமான வெடி பொருள்களுடன் (explosive device) கதிரியக்கப் பதார்த்தங்களையும் (radioactive material) சேர்த்து வடிவமைக்கப்படுபவை. ஆய்வு கூடங்கள் மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் கிடைக்கக் கூடிய கதிரியக்கப் பொருள்கள் மற்றும் நச்சு இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இலகுவாகவும் மலிவாகவும் தயாரித்துவிடக் கூடியவை. ஆபத்துக் குறைந்தவை. ஆனாலும் சூழலில் குறைந்தளவு பாதிப்புள்ள கதிரியக்கப் புகை மற்றும் தூசியைப் பரப்பிவிடக் கூடியவை.

இத்தகைய குண்டுகள் வீசப்படுவதன் நோக்கம் பெரும் பீதியையும் உளவியல் பாதிப்பையும் உருவாக்கி எதிரிக்குக் குழப்பத்தை ஏற்படுத்துவது ஆகும். அத்துடன் இக் குண்டுகள் சூழலில் பரப்பிவிடக்கூடிய கதிரியக்கக் கழிவுகளை அகற்றுவதற்குப் பெரும் நிதிச் செலவிலான சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுக்க நேரிடும்.

அதனால் இக் குண்டுகளை பேரழிவு ஆயுதம் (mass destruction) என்பதற்குப் பதிலாக எதிரிக்குப் பெரும் குழப்பத்தையும் – சிக்கலையும் – ஏற்படுத்துகின்ற ஆயுதங்கள் (“weapons of mass disruption) என்றே குறிப்பிடுகின்றனர். உலகின் எந்தப் பகுதியிலும் அழுக்குக் குண்டுகள் இதுவரை பயன்படுத்தப்படதாகத் தகவல் இல்லை. ரஷ்யாவின் தெற்கு மாகாணமாகிய செச்சினியாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அழுக்குக் குண்டுகளை வெடிக்கச் செய்ய எடுக்கப்பட்ட இரண்டு முயற்சிகள் தோல்வியடைந்தன என்ற தகவல்கள் உள்ளன.

பொதுவாக அல்கெய்டா போன்ற சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளே அழுக்குக் குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்ததக் கூடும் என்ற அச்சம் அமெரிக்கா போன்ற நாடுகளிடையே காணப்பட்டது.

தற்சமயம் உக்ரைன் போரில் மீண்டும் “அழுக்குக் குண்டுகள்” தொடர்பான பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், ரஷ்யா பதற்றத்துக்கு மத்தியில் அதன் அணு ஆயுதப் படைப் பிரிவின் வருடாந்த ஒத்திகையை நடத்தியிருக்கிறது. அணு ஆயுதங்கள் ஏவப்படுகின்ற காட்சிகளைஅதிபர் புடின் வீடியோ வழியாகப் பார்வையிடுகின்ற படங்களை ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

 
 
 
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">