தெற்கில் நூற்றுக்கணக்கான மாணவர்களை அரசாங்கம் கொலை செய்தது எமக்கு நினைவிருக்கிறது.
இலங்கையின் ஆட்சியாளர்கள் மாணவர் தலைவர்கள் மற்றும் மாணவர் செயற்பாட்டாளர்களை எப்படி கொலை செய்தார்கள் என்பதை நாட்டின் பல்கலைக்கழக பிக்குகள் அமைப்பு ஒன்று நினைவு கூர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு தலைமை தாங்கியவர்களில் சுமார் பாதி பேரை கொலை செய்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
“கடந்த காலத்தில் இந்த நாட்டை பல தந்திரங்களுடன் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்நாட்டின் பெரும் சக்தியாக இருந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 13 அழைப்பாளர்களை கொலை செய்துள்ளனர்”
அத்துடன், நூற்றுக்கணக்கான மாணவர் செயற்பாட்டாளர்களும் கொல்லப்பட்டதாக அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் பதில் ஏற்பாட்டாளர் உதேனிகம குணரதன தேரர் தெரிவித்துள்ளார்.
“மாணவர் இயக்கத்தின் 626 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது எங்களுக்குத் தெரியும்.” கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே உதேனிகம குணரதன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலி மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரது சுகாதார நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
சிறிதம்ம தேரர் சுகவீனமடைந்து மூன்று நாட்களாகியும் அவரது சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID) எந்தவொரு தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என உதேனிகம குணரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்வெவ சிறிதம்ம தேரர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.