தலைமைத்துவப் போட்டியிலிருந்து விலகினார் ஜோன்சன்!
Kumarathasan Karthigesu
முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக கட்சித் தலைமைக்கான போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். மீண்டும் பிரதமர் பதவிக்கு வர வேண்டும் என்று நாட்டு மக்கள் விருப்பம் கொண்டுள்ள போதிலும் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாத நிலையில் அதனைச் சரியான ஒரு தெரிவாகக் கருதவில்லை என்று அவர் நேற்றிரவு விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் லிஸ் ட்ரஸ் பதவி விலகியதை அடுத்து வெற்றிடமாகிய பிரதமர் மற்றும் பழைமைவாதக் கட்சியின் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இந்த வாரம் தேர்தல் நடைபெறவிருப்பது தெரிந்ததே. இந்த நிலையில் விடுமுறையை இடையில் முடித்துக் கொண்டு அவசரமாக லண்டன் திரும்பியிருந்த ஜோன்சன் மீண்டும் தலைமைப் பதவிக்குப் போட்டியிட ஆயத்தமாகினார். ஆனால் அவருக்குக் கட்சியின் 56 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவைத் தெரிவித்திருந்தனர்.எனினும் நூற்றுக்கு மேற்பட்டோரின் ஆதரவு இருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கூறியிருந்தனர்.
போட்டிக்கான வேட்பாளர்களாகத் தம்மை அறிவித்தள்ள முன்னாள் அமைச்சர்கள் ரிஷி சுனாக் மற்றும் பென்னி மோர்டான்ட் ஆகியோருடன் போட்டித் தவிர்ப்புக்கான இணக்கப் பேச்சுக்களில் ஜோன்சன் ஈட்பட்டார் என்று சனிக்கிழமை தகவல் வெளியாகி இருந்தது.
போட்டியில் இணைந்து கொள்வதற்கு குறைந்தது நூறு உறுப்பினர்களது ஆதரவை உறுதிப்படுத்த வேண்டிய கால அவகாசம் இன்று திங்கட்கிழமை நண்பகல் முடிவடைய உள்ளது. இந்த நிலையிலேயே போட்டியிலிருந்து விலகும் முடிவை ஜோன்சன் அறிவித்திருக்கிறார்.
ஜோன்சன் போட்டியிடாமல் தவிர்த்திருப்பது அவரோடு மோத ஆயத்தமாகியிருந்த ரிஷி சுனாகின் வெற்றிக்கான வாய்ப்புக்களைப் பிரகாசமாக்கியிருக்கிறது. அவருக்கு 142 உறுப்பினர்களது ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது போட்டியாளராகக் களம் புகுந்த பென்னி மோர்டான்ட் அம்மையாருக்கு நூறுக்கும் குறைந்த எம்பிக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பதால் ரிஷி சுனாக் போட்டி ஏதும் இன்றிக் கட்சித் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் தெரிவாகும் நல்வாய்ப்பு உருவாகியுள்ளது. அடுத்த பிரதமராக அவரது பெயர் இன்று அறிவிக்கப்படலாம்.