உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரே கடற்படை இந்தியக் கடற்படைதான்-சீமான்
தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய என சீமான் வலியுறுத்தல்.
நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்தும் மீன்பிடித்த காரணத்தால், காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு எதிராக தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்க, தற்போது இந்தியக் கடற்படையும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது அவர்களை வாழவே முடியாத அளவிற்கு அழித்தொழிக்கும் கொடுஞ்செயலாகும்.
இதுவரை இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது ஒரே ஒரு முறை கூடத் தடுத்துக் காப்பாற்ற வக்கற்ற உலகின் நான்காவது மிக வலிமையான இராணுவமான இந்தியக் கடற்படை, சொந்த நாட்டு மீனவர்களை மட்டும் குறி தவறாமல் சுடுவதென்பது தமிழர்கள் இந்த நாட்டின் குடிமக்களா? இல்லையா? என்ற கேள்வியை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் எழுப்புகிறது. உலகிலேயே சொந்த நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் ஒரே கடற்படை இந்தியக் கடற்படையாகத்தான் இருக்க முடியும்.
தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய இந்திய ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.