புதிய வரி திருத்தத்தினால், தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம்-
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி வசூலிப்புச் சட்டமூலத்தை தோல்வியடையச் செய்வதற்கான சகல முயற்சிகளையும் முன்னெடுப்போம். இப்புதிய வரி திருத்தத்தினால், தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுகிறது.
எனவே, அரசாங்கம் இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில்,
இதற்கு முன்னர் வருடத்துக்கு 30 இலட்சம் ரூபா வருமானம் பெறுபவர்களிடம் இருந்தே வருமான வரி அறவிடப்பட்டது. ஆனால், தற்போது அந்த தொகை 15 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மாதாந்தம் சுமார் ஒன்றரை இலட்சம் சம்பளம் பெறுபவர்கள் கூட வருமான வரியை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளது.
அத்தோடு குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டம் கட்டமாக அறவிடப்படும் வரியின் அளவும் 6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அடுத்தடுத்த கட்டங்களில் 36 சதவீதம் வரை அதிகரித்துச் செல்கின்றது.
இந்த வரி அறவீட்டு முறைமையானது தொழில் வல்லுநர்களுக்கு அசாதாரணமான ஒன்றாக காணப்படுகிறது. பொருளாதார நெருக்கடிகளால் தொழில் வல்லுநர்கள் பலர் நாட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறாக வரி அறவீட்டு முறைமையானது நாட்டை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்.
பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருவதற்கு தொழில் வல்லுநர்கள் நாட்டில் இருக்கவேண்டியது அவசியமானதாகும்.
இது தொடர்பில் ஆராய்ந்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தீர்க்கமாக ஆராய்வதற்கு செயற்பாட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நெருக்கடியை நாம் தொடர்ந்தும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.
அதற்கமைய இந்த வரி வசூலிப்புத் திட்டத்தினால் பாதிக்கப்படக்கூடிய தரப்பினரை ஒன்றிணைத்து ஒரு தேசிய சக்தியை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று தொழில் வல்லுநர்களை பாதிக்காத வகையில் எவ்வாறு வரி வசூலிப்பினை நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்.
இந்த வரி திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு அனுமதி பெறப்பட்டால் மாத்திரமே குறித்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும்.
எனவே, பாராளுமன்றத்தில் இதனை தோற்கடிப்பதற்காக முன்னெடுக்கவேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கும் என்றார்.