T20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது.

டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில், பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டியில் மழை காரணமாக 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் மற்றும் ஹைதர் அலி ஆகியோர் 49 ஓட்டங்களை வெற்றிகரமான தொடக்கம் வழங்கினர். ஆனால் அதன்பிறகு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை சாதிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஷான் மசூத் 22 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 39 ஓட்டங்கள் எடுத்தார். முகமது வாசிம் ஜூனியர் 26 மற்றும் இப்திகார் அகமது 22 ஓட்டங்கள் பெற்றனர். பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

டேவிட் வில்லி 2 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆரம்பத்தை பெறாத நிலையில் 51 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால் களத்தில் நிலைத்து நின்ற ஹாரி புரூக் 24 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் விக்கெட் இழப்பின்றி 45 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மற்ற இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் முறையே பென் ஸ்டோக்ஸ் 36 , சாம் குர்ரன் ஆட்டமிழக்காமல் 33 , லியாம் லிவிங்ஸ்டன் 28 பெற்றனர்.

பந்துவீச்சில் முகமது வாசிம் ஜூனியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷதாப் கான் மற்றும் நசீம் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை பகிர்ந்து கொண்டனர். பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 160 ஓட்டங்கள் என்ற இலக்கை 14.4 ஓவர்களில் நிறைவு செய்து வெற்றியை உறுதி செய்தது