T20 உலகக்கோப்பை-ஜிம்பாப்வே அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் ஜிம்பாப்வே- அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர்களாக ரெஜிஸ் சகாப்வா மற்றும் கப்டன் கிரேக் எர்வின் களமிறங்கினர்.

ஜிம்பாப்வே அணி ஓட்ட கணக்கை தொடங்குவதற்கு முன்பாக ரெஜிஸ் சகாப்வா ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்லே 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அதற்கு அடுத்த ஓவரிலே கப்டன் கிரேக் எர்வின் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

பின்னர் சீன் வில்லியம்ஸ் உடன் சிக்கந்தர் ராசா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் வில்லியம்ஸ் நிதானம் காட்ட, சிக்கந்தர் ராசா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த சிக்கந்தர் பவுண்டரி மழைகளை பொழிந்தார். தொடர்ந்து சீன் வில்லியம்ஸ் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்கள் சரிந்தாலும் சிக்கந்தர் ராசா அரைசதம் கடந்து தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்.

இவரின் அதிரடியால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்களை குவித்தது. 48 பந்துகளில் 82 ஓட்டங்களை குவித்த சிக்கந்தர் ராசா, இன்னிங்சின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அயர்லாந்து அணியின் சார்பாக ஜோஷுவா 3 விக்கெட்களும், சிமி சிங் , மார்க் அடேர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்கியது. அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. அந்த அணியின் தொடக்க மற்றும் நடுவரிசை வீரர்கள் ஆண்ட்ரூ பால்பிர்னி (3 ஓட்டங்கள் ), பால் ஸ்டிர்லிங் (டக் அவுட்) , லோர்கன் டக்கர் (11 ஓட்டங்கள் ), ஹாரி டெக்டர் (1 ஓட்டம் ) ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. பின்னர் ஜார்ஜ் டாக்ரெல்- கர்டிஸ் கேம்பர் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இருப்பினும் இந்த ஜோடியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. ஜார்ஜ் டாக்ரெல் 24 ஓட்டங்களிலும் , கர்டிஸ் கேம்பர் 27 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி தரப்பில் முசரபானி 3 விக்கெட்களும், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரை ஜிம்பாப்வே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.