ரணில்-ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் பேரணி’
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் மாபெரும் மக்கள் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன.
கொழும்பு நகரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி ரணில்-ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் பேரணியை நடத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தொடர் அடக்குமுறை செயற்பாடுகள் தொடர்பில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பு பொது நூலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.இதில் பங்கேற்றதன் பின்னர் முஜிபுர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, நவம்பர் மாதம் 2ஆம் திகதி கொழும்பில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் கண்டன ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, முன்னிலை சோசலிஷ கட்சி, மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அமைப்பு, தொழிற்சங்கத் தலைவர்கள், வெகுஜன அமைப்புகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.