தாய்லாந்தில் நர்சரியில் நடந்த படுகொலையில் ஒரேயொரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்ற இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று இயங்கி வந்தது. இந்த மையத்திற்குள் கடந்த 6அம் தேதி, உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஒரு நபர் நுழைந்து, அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். குழந்தைகள் அலறின; அழுதன. ஆனால் தாக்குதல் நடத்திய நபரின், கொலை வெறி தீரவில்லை. கண்ணில் கண்டவர்களையெல்லாம் ஈவிரக்கமின்றி தாக்கினார்.
இந்த பயங்கர சம்பவத்தில், 35 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 24 பேர் குழந்தைகள் என்பது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது. எஞ்சிய 11 பேர் பராமரிப்பாளர்கள், ஊழியர்கள் ஆவார்கள். அதில் அதிசயம் என்னவென்றால், வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள நர்சரியில் கடந்த வாரம் நடந்த படுகொலையில், ஒரேயொரு குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது நர்சரியில் இருந்தவர்களில் உயிர் பிழைத்த ஒரே குழந்தை ‘பவீனுட் சுபோல்வோங்’ என்ற மூன்று வயது பெண் குழந்தை மட்டுமே.
இந்த கொடூர சம்பவத்தின் போது அந்த குழந்தை வகுப்பறையின் மூலையில், ஒரு போர்வையின் கீழ் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. தன்னை சுற்றி இத்தனை பெரிய அசம்பாவிதம் நடத்து கொண்டிருப்பதை அவள் அறியவில்லை, அழவில்லை. இதனால் தான் அந்த குழந்தை காயமின்றி தப்பித்தது.
இது குறித்து குழந்தையின் தாயார் கூறுகையில், பவீனுட் சுபோல்வோங் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அது அவளுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கலாம். கொலையாளி வெளியேறிய பிறகு, வகுப்பறையின் ஒரு மூலையில் அவள் இருந்ததை யாரோ கண்டார்கள். யாரோ ஒருவர் அவளைக் கண்டுபிடித்து, போர்வையால் தலையை மூடிக்கொண்டு அவளை வெளியே அழைத்துச் சென்றார், அதனால் அவள் அவளுடைய வகுப்பு தோழர்களின் உடல்களைக் காணவில்லை.
கத்தியால் குத்தப்பட்ட 22 குழந்தைகளில், 11 குழந்தைகள் அவள் தூங்கிக் கொண்டிருந்த வகுப்பறையில் இறந்தவர்கள் ஆவர்.மற்ற குடும்பங்களுக்காக நான் கவலையாக உணர்கிறேன்… ஆனால் என் குழந்தை உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இது சோகமும் நன்றியும் கலந்த உணர்வு. அவள் பொதுவாக மதியம் தூங்கமாட்டாள். ஆனால் அன்றைய தினம் நன்றாக உறங்கிவிட்டாள். அவளுடைய கண்களையும் காதுகளையும் சில ஆவிகள் மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். தூய ஆவிகள் தான் அவளை காப்பாற்றின. இவ்வாறு கூறினார்.
பவீனுட் சுபோல்வோங் குடும்பத்தின் மர வீடு, விடுமுறை தினமான இன்று குதூகலத்துடன் காணப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ பரபரப்பாக காணப்பட்டது. தன் அம்மாவின் மடியில் பவீனுட் சுபோல்வோங் அமைதியாக அமர்ந்திருப்பதை காண முடிந்தது. அவளுடைய அன்புக்குரிய சிறந்த நண்பன், இரண்டு வயது டெச்சின் என்ற குழந்தை மற்றும் அவளுடைய ஆசிரியர் இந்த படுகொலை சம்பவத்தில் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலைவெறி தாக்குதலை நடத்தி, 35 பேரை கொன்று குவித்ததுடன், தனது மனைவி, மகளையும் கொன்று, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட அந்த நபர் யார் என்பது தெரிய வந்துள்ளது. அவர், பன்யா காம்ரப் (வயது 34) என்பவர் ஆவார். அவர், நா வாங் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் என தெரிய வந்துள்ளது.