அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிக்க கூடாது: பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, மகிந்த ராஜபக்ச உத்தரவு.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பின் 22வது திருத்தத்தின் ஊடாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமையினால் இதனை எதிர்க்க வேண்டும் என மகிந்த தனது சகாக்களுக்கு வலியுறுத்தியுள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அண்மையில் தேசிய பேரவையின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புலம்பெயர் மக்களின் நலனுக்காக 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது நாட்டுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் விரிவாக விளக்கமளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை 22ஆவது திருத்தத்தின் ஊடாக அமுல்படுத்தினால் அதற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.