சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில் தொடரும் போராட்டம்-பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரியும் சுருக்குவலை, வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிராகவும் முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை (03.10.2022) அன்று காலை முற்றுகையிட்ட முல்லைத்தீவு மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர் இவர்களது போராட்டம் இன்று (05)மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்ற நிலையில் கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் . இன்றையதினம் இவர்களது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது அவர்களும் தொடர்ச்சியான போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அமைதியான முறையில் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சட்டவிரோத தொழில் நடைபிடிக்கைகளுக்கு எதிரான மீனவர்களான தம்மீது சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளின் ஆதரவோடு ஈடுபட்டுவரும் மீனவர்களும் தென்பகுதிகளிலிருந்து வருகைதந்து சட்டவிரோத தொழில்களில் ஈடுபடுபவர்களும் இன்று தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு மது போதையில் நின்று போலீசாரின் தடைகளையும் மீறி அமைதியான எமது போராட்டம் மீது தாக்குதலை ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்த வந்துள்ளார்கள் என போராட்டத்தில் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.