புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுங்கள்-எம்.ஏ.சுமந்திரன்.
அதியுயர் பாதுகாப்பு வலயப்பிரகடன வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்ததைப்போன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
1955 ஆம் ஆண்டு 32 ஆம் இலக்க உத்தியோகபூர்வ இரகசியங்கள் சட்டத்தின்கீழ் கொழும்பிலுள்ள சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது.
அதற்கு நாடளாவிய ரீதியில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியதுடன், அதற்கெதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவ்வர்த்தமானியை வலுவற்றதாக்கி அதனை இரத்துச்செய்யும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், இதேபோன்று புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலத்தையும் வாபஸ் பெறுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி நபரொருவர் குற்றவாளியென நிரூபிக்கப்படும் வரையில் அவர் நிரபராதி என்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், மேற்படி புனர்வாழ்வுப்பணியகச் சட்டமூலம் முக்கிய அடிப்படைக்கோட்பாடுகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.