புலம்பெயர் இலங்கை வம்சாவளியினரைத் தாயகத்துடன் இணைக்க புதிய திட்டம் – ஜனாதிபதி அநுர அறிவிப்பு!

Meiveli Media Team


புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரை மீண்டும் தாய்நாட்டுடன் இணைக்கும் நோக்கில்,  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புதிய திட்டமொன்றை அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரை இலங்கையுடன் இணைக்கும் நோக்கில், ‘உலகளாவிய இலங்கை மரபுரிமைப் பிரஜை’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் பிள்ளைகளுக்கும்இ வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் பிறந்து வளர்ந்த இலங்கை வம்சாவளியினர் தமது பூர்வீகத் தாய்நாட்டுடனான உறவையும் தொடர்புகளையும் தொடர்ந்து பேணுவதற்கு ஊக்கமளிப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன், இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதில் குடும்பங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமையைக் குறைத்து, அடுத்தடுத்த தலைமுறையினரும் இலங்கையுடனான தமது மரபுரிமைத் தொடர்பைப் பேணுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதும் இதன் மற்றுமொரு நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், பிரித்தானியா,  கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரின் இளைய தலைமுறையினரைத் தாய்நாட்டுடன் மீண்டும் இணைப்பதற்கான ஒரு முயற்சியாக இந்தத் திட்டம் பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளில் புலம்பெயர் சமூகத்தின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.