பிரித்தானியாவில் ஒன்றுகூடும் 100 தமிழ் புலம்பெயர் அமைப்புகள்: சர்வதேச மாநாட்டுக்குத் திட்டம்!
Meiveli Media Team

உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கிவரும் சுமார் 100 தமிழ் புலம்பெயர் அமைப்புகளை ஒன்றிணைத்து, இலங்கையின் அரசியல் எதிர்காலம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சர்வதேச மாநாடொன்றை பிரித்தானியாவில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இந்த முயற்சியை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காகப் பல்வேறு நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் சிங்கள பத்திரிகையை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளுடனும் ஆரம்பகட்ட ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆகிய சர்வதேசப் பிரமுகர்களுடனும் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. எனினும், இவர்களின் பங்கேற்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை, மாநாட்டின் திகதி, இடம் மற்றும் பங்கேற்கவுள்ள அமைப்புகளின் இறுதிப் பட்டியல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமானால், இலங்கையின் அரசியல் தீர்வு மற்றும் தமிழர்களின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பான விவாதங்களை சர்வதேச மட்டத்தில் மீண்டும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய தளமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

