வெளிநாட்டில் பெற்ற விவாகரத்து இந்தியாவில் செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
Meiveli Media Team

இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டவர்கள், வெளிநாட்டு நீதிமன்றங்களில் விவாகரத்துப் பெற்றாலும், அந்த விவாகரத்து இந்தியச் சட்டத்தின்படி தானாகவே செல்லுபடியாகாது என இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறு வெளிநாட்டில் விவாகரத்துப் பெற்ற பின்னர், இந்தியச் சட்டப்படி முதல் திருமணம் முறையாக ரத்துச் செய்யப்படாத நிலையில், இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அது இருதார மணக் குற்றமாகக் கருதப்படலாம் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மனைவியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், திருமண உறவு மீள முடியாத அளவுக்குச் சீர்குலைந்துவிட்டது என்ற காரணத்தைக் குறிப்பிட்டு வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்துப் பெற்ற ஒருவர், பின்னர் மறுமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, முக்கியமான சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளது. இந்திய இந்துத் திருமணச் சட்டத்தின்படி, திருமண உறவு மீள முடியாத அளவுக்குச் சீர்குலைந்துவிட்டது என்பது, தனியாக விவாகரத்துக்கான சட்டபூர்வ காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, இந்தியச் சட்டத்துக்கு முரணான காரணத்தின் அடிப்படையில் வெளிநாட்டு நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவு, இந்தியாவில் சட்ட அங்கீகாரம் பெறாது என்றும், உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளுக்கு முரணான வெளிநாட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கிடையில், மறுமணம் செய்துகொண்ட காலப்பகுதியில் தாம் பிரித்தானியக் குடியுரிமை பெற்றிருந்ததாகவும், வெளிநாட்டில் மறுமணம் செய்துகொண்டதால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் குறித்த நபர் வாதிட்டுள்ளார். ஆனால், இந்த வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்தியாவில் இந்து முறைப்படி நடைபெற்ற முதல் திருமணத்தின் சட்டபூர்வ விளைவுகளை, பின்னர் குடியுரிமையை மாற்றிக்கொள்வதன் மூலமோ அல்லது வெளிநாட்டில் மறுமணம் செய்துகொள்வதன் மூலமோ தவிர்த்துக்கொள்ள முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த நபருக்கு எதிராகக் குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் விவாகரத்துப் பெற்றுவிட்டோம் என்பதற்காக இந்தியாவில் மறுமணம் செய்துகொள்ள முடியாது. முதல் திருமணத்தின் சட்டபூர்வ முடிவு உறுதிப்படுத்தப்படுவது அவசியம் என்பதையே இந்தத் தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

