புலம்பெயர் தமிழ் நாடகக் கலையின் வரலாற்றையும், அகதி வாழ்வின் அனுபவங்களையும் ஆவணப்படுத்தும் வகையில், நாடகக் கலைஞரும் சுவிஸ் நாடக அரங்கக் கல்லூரியின் நிறுவுனருமான  அன்ரன் பொன்ராஜா அவர்களின் ‘பனிமலையில் கூத்தாடிகள்’ நூல் அறிமுக விழா, கடந்த நவம்பர் முதலாம் திகதி ஞாயிற்றுக்கிழமை, லண்டன் நியூ மால்டனில் அமைந்துள்ள ரிச்சர்ட் சலோனர் பாடசாலை அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மெய்வெளி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில், நடைபெற்ற இந்நிகழ்வில், கலை இலக்கிய ஆர்வலர்கள், நாடகத்துறையினர், திரைதுறையினர், கல்வியாளர்கள் மற்றும் தமிழ் உறவுகள் பலரும் கலந்துகொண்டனர். மங்கல விளக்கேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து நடனத்துடன் அறிமுக விழா ஆரம்பமானது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கான நடனத்தை செல்வி அஞ்சனா மற்றும் செல்வி சாளவி வழங்கியிருந்தனர்.
சபையோரை வரவேற்று கவிஞரும், மெய்வெளி நாடக இயக்க அங்கத்தவருமான சுகுணா சுதாகர் வரவேற்புரையை நிகழ்த்தினார்.  தொடர்ந்து நூலாசிரியர் பற்றிய சிறப்பு அறிமுகவுரையை, வைத்தியர் ஹீமா புவிநாதன் அவர்கள் வழங்கியபோதுஇ நூலாசிரியர் அன்ரன் பொன்ராஜா அவர்களின் நீண்டகால நாடகப் பயணத்தையும், புலம்பெயர் சமூகத்திற்கும் தமிழ் நாடகக் கலைக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகளையும் எடுத்துரைத்தார். 2000ஆம் ஆண்டு சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியை நிறுவி, அடுத்த தலைமுறைக்குத் தமிழ் நாடகக் கலையைக்பயிற்றுவிக்கும்  பணியிலும் தன்னை அர்ப்பணித்தவர் என்பதனை எடுத்துக் சுறினார். இந்த விழாவிற்கு சிறப்பு அதிதியாக வருகை தந்திருந்த சுவிஸ் நாடக அரங்கக் கல்லூரியின் நடப்பு ஆண்டு அதிபரும், ஓசை திரைப்பட நிறுவனத்தின் நிறுவுனருமான கலைவளரி சக ரமணதாஸ் அவர்களிடம்  அறிமுக விழா நினைவுச் சான்றிதழ் மெய்வெளி வெளியீட்டக நிறுவனர் சாம் பிரதீபனால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
நிகழ்வின் முக்கிய பேச்சாளர் பகுதியை  ஈழத்து இலக்கிய,  சமூகச் சிந்தனைப் பரப்பின் முக்கிய ஆளுமையான  மு நித்தியானந்தன் அவர்கள்  தலைமை தாங்கி வழி நடத்தினார். இந்நூலை ஆய்விற்காக அடிப்படை வளம் என்று பாராட்டிய அவர் பல்கலைக்கழகங்கள் முன்னெடுக்க வேண்டிய பணியை அன்ரன் பொன்ராஜா அர்ப்பணிப்போடு முன்னெடுத்தமையை சுட்டிக் காட்டினார்.  ஈழத்து அரங்கின் எழுச்சி மிக்க காலங்களில் தான் கண்ட நாடக அனுபவங்களையும் அரங்கில் பிரசன்னமாக இருந்த ஈழக்கூத்தன் தாசிசியஸ் அவர்களின் அரங்க நிபுணத்துவத்தையும் அவர் வழி தொடாந்த அன்ரன் பொன் ராஜா அவர்களின் அரங்கப்பணியையும் பற்றி உரையாற்றினார். அறிமுக உரையை வழங்கிய சாம்பிரதீபன் பேசுகின்ற போது மெய்வெளி வெளியீட்டகத்தினால் தெரிவு செய்யப்பட்ட நூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் பின்னணியையும்  சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நூல்களின் கனதி பற்றியும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து ஈழத்தின் நவீன தமிழ் நாடக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற நாடகக் ஆசானும், மேற்கத்தைய நாடக நுட்பங்களையும் ஈழத்தின் பாரம்பரியக் கூத்துக் கலை வடிவங்களையும் இணைத்து, புதிய நாடக அரங்கப் போக்கை உருவாக்கியவரும் ஈழக்கூத்தன் என புகழ்பெற்ற தாசிசியிஸ் அவர்களின் பங்கேற்பு விழாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஈழத்து அரங்க வரலாற்றில் வேர் தேடியாக தான் பெற்ற அனுபவங்களையும் ஈழத்து அரங்கிற்காக சேமித்த விடயங்களையும் எடுத்துரைத்து அரங்க வேரோடிகளாக அன்ரன் பொன்ராஜா அவர்களும், சாம் பிரதீபன் அவர்களும் தற்கால அரங்கப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
 அவரைத் தொடர்ந்து நூலிற்கான நயப்புரை வழங்கலில் அரங்கப் பார்வைக்கான உரையை நாடக ஆர்வலர் சாம் வேணுகோபால் ஆற்றினார்.  வேப்பிலையோடு காஞ்வோண்டி செடி கொண்டு அடிக்க்கப்ட்ட தன் நாடக அனுபவத்தை சொன்னபோது அவையில் இருந்தோர் சிரித்து கரவொலி எழுப்பினர். நூலாசிரியரின் பணியையும் நூலின் உள்ளடத்தையும் வியந்து பாராட்டினார். அவரைத் தொடர்ந்து ஆய்வுப்பார்வையை மாதவி சிவலீலன் அவர்கள் முன்வைத்தார். ஈழத்துத் தமிழ் இலக்கிய ஆய்வுப் பரப்பிலும்,  பிரித்தானியத் தமிழ்க் கல்வி மற்றும் இலக்கியச் செயற்பாடுகளிலும் பங்களித்து வரும் எழுத்தாளர் மற்றும் ஆய்வாளரான இவரின் தந்தையும் ஈழத்து நாட்டாரியல் ஆய்வாளருமான கலாநிதி காரைசுந்தரம்பிள்ளை அவர்கள்,  முதல் நாடக அரங்க டிப்ளோ கற்கைநெறியாளர்களில் ஒருவர் என்ற தகவலை பதிவிட்டதோடு, நூலின் ஆழமும் கனதியும்  இனி வரும் ஈழத்து ஆய்வுகளுக்கு ஒரு மூல நூலாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய  ஈழத் தமிழ் ஊடகப் பரப்பில் இலக்கியம் மற்றும் சமூக விவகாரங்களைப் பொதுவெளிக் கலந்துரையாடல்களுக்கு துணிச்சலாக  கொண்டுவரும் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான இளையதம்பி தயானந்தா, ஆவணப்படுத்தலில் ஈழத்தமிழ் சமூகத்தின் அக்கறையின்மையைபற்றி எடுத்துக்காட்டியதோடு, ஈழத்து மேடை நாடகங்கள் போல, ஈழத்து வானொலி நாடகங்கள் பதிவாக்கம் செய்யப்படாமை பற்றியும் தெரிவித்தார்.  இந்த வகையில் அன்ரன் பொன்ராஜா எடுத்த முயற்சியை அவர் பாராட்டினார்.  தொடர்ந்து ஏற்புரையை நிகழ்த்திய சுவிஸ் நாடக அரங்கக் கல்லூரியின் அதிபர் ரமணதாஸ் அவர்கள் பேசிய போது நாடக ஈடுபாட்டாளனாக தனக்குள் நாடகக்கலை ஏற்படுத்திய மாற்றம் பற்றி உளம் திறந்து பேசியார். இதேவேளை ஈழக்கூத்தன் தாசிசியஸ் அவர்களோடு இணைந்து சில நாடகப்பாடல்களைக் பாடி சபையை உற்சாகப்படுத்தினார்.  பேரறிவாளர்களின் பேச்சுக்காளால் நிறைந்த அரங்கங்காக இந்த அறிமுகவிழா அமைந்தததாக பங்குபற்றியோர் கருத்து தெரிவித்தனர்.

உரைகளைத் தொடர்ந்து, மெய்வெளி அரங்க இயக்கத்தின் நடிகர்களான காயத்திரி மற்றும் வசந்தகுமாரி அவர்களால் கதையாடல் நிகழ்வும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சுவிஸ்தமிழ் நாடகக் கல்லூரியின் வரலாற்றையும், புலம்பெயர் தமிழர்களின் வாழ்வியல் அனுபவங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுக்குக் கடத்தும் ஒரு முக்கியமான ஆவணமாக ‘பனிமலையில் கூத்தாடிகள்’ நூல் அமைகின்றது என்பதனை லண்டன் மெய்வெளி வெளியீட்டகத்தின் அறிமுகவிழா கட்டியம் கூறி நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.