வெற்றிகரமாக நிறைவுபெற்றது தமிழர் கலைபண்பாட்டுப் பாசறையின் ஈழத்தாரகை 2026

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றையும், தாயக நினைவுகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் நோக்கில், தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை – ஐக்கிய இராச்சியம் நடத்திய “ஈழத்தாரகை 2026” மாபெரும் தாயகப் பாடல்களுக்கான நடனப் போட்டியின் இறுதிச்சுற்று, கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி, சனிக்கிழமை, நியூ மால்டனில் அமைந்துள்ள Richard Challoner மண்டபத்தில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.
இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகி, பிரித்தானிய மற்றும் தமிழீழ தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து, பொதுமாவீரர்களின் திருவுருவப் படத்திற்கு தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை – பிரித்தானியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், ஈழத்தாரகையின் நிறுவனருமான திரு. ச. அறிவாளன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க, அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
துஷியந்தி கதிர்வேல் ஆசிரியரின் நெறியாள்கையில் இளம் நடனக் கலைஞர்களின் வரவேற்பு நடனம் அரங்கேறியது. அரங்கில் கூடியிருந்த கலை ஆசிரியர்கள், கலைஞர்கள், நடன மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களைத் தமிழர் கலைபண்பாட்டுப் பாசறை – பிரித்தானியாவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. ச. அறிவாளன் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.
நிகழ்வு தொடர்பான தொகுப்புரையை செல்வி திஷானா கமலநாதன் வழங்கியிருந்தார். தொடர்ந்து, தலைமை உரையைத் தலைமை ஒருங்கிணைப்பாளரும், நிறுவனர்களில் ஒருவருமான திரு. ம. கண்ணா அவர்கள் ஆற்றியிருந்தார்.

ஈழத்தாரகை 2026 இறுதிப்போட்டியின் நடுவர்களாகப் பங்கேற்பதற்காக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகைதந்த நாட்டியக் கலை ஆளுமைகளான திருமதி யாழினி பாலேந்திரன், திருமதி றெஜினி சத்தியகுமார் மற்றும் திருமதி றிஷாந்தினி சஞ்ஜீவன் ஆகியோருக்கு அறிமுகமும் மதிப்பளிப்பும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஆறு பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. விண்ணொளி, நிலவொளி மற்றும் கதிரொளி ஆகிய மூன்று அமர்வுகளின் கீழ் தனிநடனம் மற்றும் குழு நடனப் போட்டிகள் சிறப்பாக அரங்கேறின.
போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ஈழத்தாரகையின் “Title Winner” விருதுகள் வழங்கப்பட்டன. அத்துடன், தனிநடனப் போட்டியில் வெற்றிபெற்ற மூவருக்கும் தலா 500 பவுண்டுகள் பணப்பரிசும், குழு நடனப் போட்டியில் வெற்றிபெற்ற மூன்று குழுக்களுக்கும் தலா 1,000 பவுண்டுகள் பணப்பரிசும் வழங்கப்பட்டன.

06–12 வயதினருக்கான விண்ணொளிப் பிரிவின் தனிநடனப் போட்டியில், “தீயினில் எரியாத தீபங்களே” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் துஷியந்தி கதிர்வேலின் மாணவியான செல்வி சாய்வைஸ்ணவி சிவசோதி வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டு விருதினைப் பெற்றுக்கொண்டார்.இதே பிரிவின் குழு நடனப் போட்டியில், “வேலுப்பிள்ளை பெற்ற பிள்ளை எங்கள் மகராசா” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் சுஜியந்தி நடராஜாவின் மாணவிகள் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.
13–17 வயதினருக்கான நிலவொளிப் பிரிவின் தனிநடனப் போட்டியில், “படை நடத்தி படை நடத்தி பாசறை தகர்த்தோம்” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் பிரேமளாதேவி இரவீந்திரன் அவர்களின் மாணவனான செல்வன் நோவா லெட்சுமிகாந்தன் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டு விருதினைத் தனதாக்கிக்கொண்டார்.
இதேவேளை, நிலவொளிப் பிரிவின் குழு நடனப் போட்டியில், “ஈழம் உயிரில் கலந்து எழும் தேசம் உணர்வில்” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் கேசாந்தி சிவகரன் அவர்களின் மாணவிகள் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.

18–25 வயதினருக்காக நடத்தப்பட்ட கதிரொளிப் பிரிவின் தனிநடனப் போட்டியில், “ஒரு மொழி வைத்து இந்த உலகாண்ட” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் சுஜாதா சதீஸ் அவர்களின் மாணவியான செல்வி கம்சினி சுபேந்திரன் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டு விருதினைத் தட்டிச்சென்றார்.
இதேவேளை, கதிரொளிப் பிரிவின் குழு நடனப் போட்டியில், “பொங்கு தமிழாகப் பொங்கி நிற்கிறோம்” என்ற பாடலுக்கு நடனமாடிய ஆசிரியர் மதிவதனி பிரபாகரன் அவர்களின் மாணவிகள் வெற்றிவாகை சூடிக்கொண்டனர்.
மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து நடனக் கலைஞர்களுக்கும் விருதுகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஈழத்தாரகை 2026 நிகழ்வானது நடனப் போட்டியாக மட்டுமன்றி, கலைத்துறையில் நீண்டகாலமாகப் பெரும் பங்களிப்புகளை வழங்கிவரும் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் நிகழ்வாகவும் சிறப்புப் பெற்றிருந்தது.
அந்த வகையில், புரட்சிப் பாடகர் ஜெயா சுகுமார் அவர்களுக்கு ‘தேசியப் பேரொலி’ என்ற விருதுப் பட்டமும், கானபூஷணம் அம்பிகா தாமோதரம் அவர்களுக்கு ‘கலை மரபுத்தாய்’ என்ற பட்டமும், நாட்டியக் கலைமாமணி பிரேமளாதேவி இரவீந்திரன் அவர்களுக்கு ‘கலைப் பேரொளி’ என்ற பட்டமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
அத்துடன், ஈழப்பாடகர் எஸ்.ஜி.எஸ். கோகுலன் அவர்களுக்கு இளங்குரல் சாதனையாளர் விருதாக ‘ஈழக்குரலோன்’ என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
இதேவேளை, Zee Tamil தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற மாதுளானி ஜதீஸ் பெர்னாண்டோ அவர்களும் மேடையில் மதிப்பளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், தமிழர் கலைபண்பாட்டுப் பாசறையினால் வெளியிடப்பட்ட ‘ஈழத்தாண்டவம்’ எனும் ஒலிப்பேழை இளைய தலைமுறையினரிடம் வழங்கிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நிதுசனா பாலதர்மகுமார் அவர்களின் நெறியாள்கையில், ‘ஈழத்தாண்டவம்’ பாடலுக்கான சிறப்பு நடனமும் அவரது நடனக் குழுவினரால் மேடையேற்றப்பட்டது.

மெய்வெளி தொலைக்காட்சி ஊடக நிறுவனத்தின் நிறுவனர் திரு. சாம் பிரதீபன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியதுடன், ஈழத்தாரகை நிகழ்வு தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து, மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
நிறைவாக, தமிழர் கலைபண்பாட்டுப் பாசறையின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், ஈழத்தாரகையின் நிறுவனருமான திரு. செ. பாலதர்மகுமார் அவர்கள் நன்றியுரையை வழங்கியிருந்தார்.
நிகழ்வின் தொகுப்பாளராகப் பணியாற்றிய மித்ரா அவர்கள், தாயக வரலாற்றுக் குறிப்புகளை அவ்வப்போது இணைத்து, நிகழ்ச்சிகளைச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து வழங்கியிருந்தார்.
புலம்பெயர் தேசத்தில் வாழும் இளம் தலைமுறையினரின் கலைத்திறன்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதுடன், ஈழத்தின் வரலாற்று உணர்வுகளையும் தாயக நினைவுகளையும் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தும் ஒரு முக்கியமான கலைத்தளமாக ஈழத்தாரகை 2026 நிகழ்வு அமைந்திருந்தது என்பதை மெய்வெளி ஊடகம் பாராட்டி மகிழ்கின்றது.









































