“பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக பதிலடி கொடுப்பேன்” – உதய கம்மன்பில எச்சரிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பிவிதுரு ஹெல உரிமையின் தலைவர் உதய கம்மன்பில,
அநுராதபுர புனித நகர அபிவிருத்தி வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பௌத்த விவகாரங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் வெளியிட்ட முரணான கருத்துக்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்ரீ மகா போதியை வதந்தி மற்றும் கொடூரமான முறை என வர்ணித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் செயற்பாட்டை தர்க்கரீதியாக விமர்சித்த போது, அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் முறையான பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்த அவர், எனினும் ஏனைய அமைச்சர்கள் சிலர் தங்களது கூற்றுக்களைத் திரிவுபடுத்தி கருத்து வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
திசைகாட்டி அரசாங்கம் பௌத்த மதத்திற்கு எதிரானது அல்ல என மத விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ள வாதத்தை முற்றாக நிராகரித்த உதய கம்மன்பில, அரசாங்கம் பௌத்தத்திற்கு எதிரானது என்பதை நிரூபிக்க தங்களால் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட 14 குறிப்பிட்ட காரணங்களை மீண்டும் நினைவுபடுத்தினார்.
ஜனாதிபதி பதவியேற்பின் போது பிரித் நூல் கழற்றப்பட்டமை, நாடாளுமன்ற மகா அமர்வில் ஜயமங்கல கீதம் நிறுத்தப்பட்டமை, ருவன்வெலிசேய வெறும் நினைவுச்சின்னம் என வர்ணிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீ மகா போதியை கொடூரமாக விமர்சித்த பிமல் ரத்நாயக்கவுக்கே அநுராதபுர புனித நகர அபிவிருத்திப் பொறுப்பு வழங்கப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுச் சான்றுகளை அவர் இதன்போது பட்டியலிட்டார்.
அநுராதபுர ருவன்வெலிசேயவைச் சுற்றி வேலி அமைக்க முயல்பவர்கள் மனநோயாளிகள் எனவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தயார் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் மருத்துவர் ஹன்சக விஜேமுனி தெரிவித்த கருத்து குறித்துப் பேசிய கம்மன்பில, அந்த மனநோயாளி வேறு யாருமல்ல, அரசாட்சியின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்கவே என சாட்சியங்களுடன் நிரூபித்தார். இலக்கம் 2477/44 என்ற வர்த்தமானி அறிவித்தலின் 7A பக்கத்தில், ருவன்வெலிசேயவைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், சுகாதார அமைச்சரின் வாதத்தின் பிரகாரம் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கே உடனடியாக மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என அவர் சவால் விடுத்தார்.
புனித நகர அபிவிருத்தியின் போது ருவன்வெலிசேய தோண்டப்பட்டு சேதமடையும் என தான் கூறியதாக பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்த குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்த கம்மன்பில, தம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துபவர்கள் ‘திசைகாட்டி என்றால் பொய்’ என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.
தம்மைக் குறிவைத்து பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்குச் செல்லும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயார் எனக் குறிப்பிட்ட அவர், வர்த்தமானியில் உள்ள தவறுகளை மறைக்க முயலாது அரசாங்கம் அதனை உடனடியாகத் திருத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

