எரிபொருள் விலை ஏற்றம்: பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின் கவலைகள்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் பெறப்பட்ட நேரடித் தகவல்களின் அடிப்படையில், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் இந்த விலை அதிகரிப்பு தங்களுக்குக் கூடுதல் சுமையையும் பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகப் பெரும்பாலான மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், இந்த விலை ஏற்றம் மிகக் குறைந்த தொகையிலேயே இடம்பெற்றுள்ளதாகவும், நாட்டில் இதுவரை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களின் காலத்திலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது இயல்பான ஒரு நடைமுறையே என்றும் சில பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தற்போதைய ஜனாதிபதி அவர்கள் நாட்டின் பொருளாதார நிலையைச் சீரமைத்து, மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை விரைவில் வழங்குவார் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம், இந்த திடீர் விலை உயர்வு காரணமாகத் தங்களது அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கவலை வெளியிடுகின்றனர்.
எரிபொருளுக்கான செலவு அதிகரித்துள்ளதால், வேறு வழியின்றித் தங்களது த்ரீவீல் பயணக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் த்ரீவீல் பயன்பாட்டைக் குறைக்கக்கூடும் என்பதால் தங்களின் தினசரி வருமானம் பெருமளவில் சரிவடையும் எனக் அஞ்சுகின்றனர்.

இவற்றுடன், எரிபொருள் விலை உயர்வின் நேரடிப் பக்க விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துச் செலவுகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் காய்கறிகள் மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் சில்லறை விலைகளும் உயரக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துத் துறையினருக்கும் உடனடிச் சுமையைக் குறைக்கும் வகையில் மானியங்களையோ அல்லது ஏதேனும் நிவாரணத் திட்டங்களையோ விரைந்து அறிவிக்குமாறு அரசாங்கத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.