சீரற்ற வானிலை : மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்கள் பாதிப்பு : நாளை நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை மூட நடவடிக்கை
Meiveli Media Team

சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இடம் பெயர்ந்து தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும், சீது விநாயகர் குளம் கிராமத்தை சேர்ந்த 21 குடும்பங்கள் உள்ளடங்களாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 நபர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் இலுப்பைக்கடவை பாடசாலை யில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த இரு கிராமங்களுக்குமான பாதைகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டுள்ளதோடு, குறித்த இரு கிராமங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் 4 வீடுகள் சேதமடைந்துள்ளது டன் 4 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்தார். இதேவேளை தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண பரிடு;சைகள் அழகியல் பாடத்திற்கான செய்முறைத் பரீட்சைகள் முன்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

