யாழ்ப்பாணக் குடாக்கடலில் எல்லாளன் டூரிஸம்: சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டம்!
Meiveli Media Team

யாழ்ப்பாணம் – வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ‘எல்லாளன் டூரிஸம்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணக் குடாக்கடலின் இயற்கை அழகை இரசிப்பதுடன், பல்வேறு கடல்சார் விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடும் விசேட படகுச் சுற்றுலா நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த முன்னோடிப் செயற்திட்டத்தில் ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பணியகப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், இவ்வாறான கடல்சார் சுற்றுலா முயற்சிகள் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறைக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.
பாரம்பரிய மீன்பிடி அனுபவம், கடலட்டை வளர்ப்புப் பண்ணையைப் பார்வையிடுதல், பனானா படகுச் சவாரி மற்றும் கடல்வாழ் உயிரினங்களை அவதானித்தல் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை எல்லாளன் டூரிஸம் நிறுவனம் வழங்கி வருகின்றது. இந்த முயற்சிகள் ஊடாக உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், வடக்கு மாகாணத்தின் கடல்சார் வளங்களைப் பாதுகாத்து நிலையான சுற்றுலாத்துறையை வளர்ப்பதே தமது நோக்கம் என நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

