திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது!
Meiveli Media Team

சென்னை – தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட அன்பில் மகேஸ், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகச் தெரிவிக்கப்படுகின்றது.
2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்ததாகப் பள்ளி நிர்வாகிகள் முறைப்பாடு அளித்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், அன்பில் மகேஸ் உள்ளிட்ட சிலருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

