அமெரிக்க போர்க்கப்பலின் கொழும்பு வருகை & 40 ஈரானிய மாலுமிகள் மீட்பு: இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் வியூக மற்றும் மனிதாபிமான நடவடிக்கை
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யு.எஸ்.எஸ் கென்பெரா’ (USS Canberra – LCS 30) என்ற ‘இன்டிபென்டன்ஸ்’ (Independence-variant) வகையைச் சேர்ந்த சண்டை போர்க்கப்பல், வழக்கமான துறைமுக விஜயத்தின் ஒரு பகுதியாக அக்டோபர் 26 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
நடப்பு ஆண்டில் இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் இக்கப்பல் இலங்கைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரின் வரவேற்புக்கும், தொழில்முறை ஒத்துழைப்புக்கும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து இலங்கைகான அமெரிக்க தூதர் எரிக் மேயர் (Eric Meyer) கருத்து தெரிவிக்கையில், இந்த விஜயங்கள் மிகவும் சுமூகமாகவும் திறம்படவும் நடைபெறுவதற்கு இலங்கை கடற்படையினர் அளித்த ஆதரவை பெரிதும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டதுடன், ஒவ்வொரு துறைமுக விஜயமும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட இருநாட்டு கடற்படை கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதாகவும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கான கூட்டுப் பொறுப்பை உறுதிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் தொடர்ச்சியான விஜயங்கள், அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையே நிலவும் நீண்டகால கூட்டுறவையும், இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இரு நாடுகளுக்கும் உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகின்றன.
அதேவேளையில், இலங்கை கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் பிராந்தியத்தில் சிக்கித் தவித்த ஈரானிய கப்பல்களிலிருந்து 40 ஈரானிய மாலுமிகளை இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். காலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த மாலுமிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு, அவர்களை மீண்டும் ஈரானுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை இலங்கை வெளியுறவு அமைச்சு ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமெரிக்க மற்றும் ஈரானிய கப்பல்களின் நடமாட்டங்கள் அதிகரித்துள்ள சூழலில், இலங்கை கடற்படை தனது நடுநிலையான மனிதாபிமான உதவிகளையும், அதேசமயம் அமெரிக்காவுடனான கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மையையும் தொடர்ச்சியாகவும் சமநிலையுடனும் முன்னெடுத்து வருகிறது.

