வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் தங்களது சொந்தக்காலில் சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்குச் சுயதொழில் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 219 பயனாளிகளுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை கொழுப்பு டேம் வீதி (Dam Street) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஒரு கட்டமாக, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட நவகம்புர வட்டாரத்தில் வரிய குடும்பங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்களுக்கு 15 தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் A.P. செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டலின் கீழ், மக்கள் எக்காலத்திலும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழாமல், தங்களது சுயமுயற்சியால் தொழில் செய்து கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள 14,022 கிராம சேவகர் பிரிவுகளை மையமாகக் கொண்டு இத்தகைய வறுமை ஒழிப்பு மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அரசியல் சுயலாபங்களுக்காக இயந்திரங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்ட நிலைக்கு மாறாக, தற்போதைய அரசாங்கம் வறுமையில் வாழும் உரிய மக்களைக் கண்டறிந்து உதவிகளை வழங்கி வருகின்றது.

தனியாக ஒரு தையல் இயந்திரத்தை விலைக்கு வாங்க முடியாத நிலையில் உள்ள வரிய குடும்பங்களுக்கு இத்தகைய உதவிகள் பெரும் பக்கபலமாக அமைகின்றன.

எனவே, வழங்கப்பட்ட தையல் இயந்திரங்களை வீடுகளில் சும்மா வைத்திருக்காமல், அதன் மூலம் சுயதொழிலைச் சிறந்த முறையில் மேற்கொண்டு, தனிமனித உழைப்பின் மூலம் பொருளாதார ரீதியில் மக்கள் முன்னேற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.