இந்துக் கல்லூரி கொழும்பில் கோலாகலமாகத் தொடங்கியது நவராத்திரி விழா!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சக்தி தேவியைப் போற்றி வழிபடும் பக்திச் சிறப்புமிக்க நவராத்திரி பெருவிழா இன்று (அக்டோபர் 11, 2026) உலகெங்கும் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

இதன் ஒரு அங்கமாக, இந்துக் கல்லூரி கொழும்பின் ஆரம்பப் பிரிவைச் சேர்ந்த முதலாம் மற்றும் இரண்டாம் தர வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் சிறப்பான பங்களிப்புடன் நவராத்திரி விழா இன்றைய தினம் மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி வாசுகி சுதாகரன் அம்மையாரின் முழுமையான ஆலோசனைகள் மற்றும் தொலைநோக்கு வழிகாட்டல்களுக்கு அமைவாக, மாணவர்கள் பண்பாட்டு விழுமியங்களை உணரும் வகையில் இந்நிகழ்வு மிக நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

இப்பூஜை நிகழ்வுகளை இந்துக் கல்லூரி கொழும்பு – ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய நித்திய அர்ச்சகர் சிவஸ்ரீ சிவகுமார சர்மா அவர்கள் சிறப்பாக நடாத்தி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் ஒன்றிணைந்து கலைநயத்துடன் அமையப்பெற்றிருந்த கொலு பொம்மைகளை மலர்மாலையிட்டு அலங்கரித்து, அதன் முன் புனிதமான நவதானியங்களைப் பரப்பி ஆன்மீகச் சூழலை உருவாக்கினர்.

இறை உணர்வை ஊட்டும் வகையில் ‘சகலகலாவல்லி மாலை’ பதிகங்களை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றுசேர்ந்து மனமுருகிப் பாடி அன்னையின் அருளை வேண்டி நின்றனர்.

வழிபாடுகளின் நிறைவாகத் தயாரிக்கப்பட்ட நைவேத்தியங்களும் பிரசாதங்களும் அன்னை பராசக்திக்குப் படைக்கப்பட்டு வருகை தந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டன.

நாடெங்கிலுமுள்ள ஆன்மீகத் தலங்களிலும் வீடுகளிலும் பராசக்தி தேவி சிறப்பு அலங்காரங்களுடன் வழிபடப்படும் இந்நவராத்திரிப் பெருவிழா, எதிர்வரும் அக்டோபர் 20, 2026 அன்று விஜயதசமி திருநாளுடன் நிறைவடையவுள்ளது.

மாணவர்கள் சிறு வயதிலேயே தமிழ் மரபையும் ஆன்மீக நெறிகளையும் கற்று உணரும் வகையில், இந்துக் கல்லூரி கொழும்பின், அதிபரின் வழிகாட்டலில் இந்த விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.