PSTA சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள PSTA சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்யக் கோரி, இன்று (09) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புகளின் கூட்டமைப்பான மெசிடோ (MESIDO) அமைப்பின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாக அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், அதனை முழுமையாக இரத்துச் செய்யுமாறு கோரியும் போராட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

முன்மொழியப்பட்ட சட்டத்தின் பயங்கரவாதம் தொடர்பான வரையறைகள், கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கரிசனைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த சட்டத்திற்கு எதிராக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கலந்துரையாடல்கள் மற்றும் எதிர்ப்புப் பிரசாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.