இலங்கை தமிழ் இசைத்துறை மேம்பாட்டிற்காக “நல்லதோர் வீணை செய்தே” இசை நிகழ்ச்சி: இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் வேண்டுகோள்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையில் உள்ளூர் கலைஞர்களையும் இசைத்துறையையும் மேம்படுத்தும் பிரதான நோக்கத்துடன் “நல்லதோர் வீணை செய்தே…” எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை பிரபல இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் ஏற்பாடு செய்துள்ளார்.
“உள்ளூர் உற்பத்திகள் பெருக வேண்டுமெனில், இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்; இது கலைக்கும் பொருந்தும்” என்ற வலுவான கருத்தை மையமாகக் கொண்டு இந்த கலைப்பயணம் முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளூர் படைப்புகளுக்கும் கலைஞர்களுக்குமான அங்கீகாரமும் வரவேற்பும் வெகுவாகக் குறைந்து வந்துள்ளதாகக் கவலை தெரிவிக்கும் இசையமைப்பாளர் பிரபாகரன், பெரும்பாலான குடும்பங்கள் வெளிநாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் சினிமாக்களிலுமே கவனம் செலுத்துவதாகக் குறிப்பிடுகிறார்.
இதனால் உள்ளூர் கலைத்துறை நலிவடைந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், கலைஞர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இத்தகைய சூழலில், இலங்கை இசைத்துறையின் சிறப்பை மீட்கவும், உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் “Karuppiah Pillai Prabaharan Live in Concert” என்ற பெயரில் நாளைய தினம் 10.10.2026 சனிக்கிழமை மாலை 06:30 மணிக்கு கொழும்பு-03, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள பிஷப்ஸ் கல்லூரி அரங்கத்தில் (Bishop’s College Auditorium) இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
80 மற்றும் 90களின் மெல்லிசைகளை மையமாகக் கொண்டு 14 இசைக்கலைஞர்கள் அடங்கிய வயலின் ஆர்கெஸ்ட்ரா மற்றும் உள்ளூர், சர்வதேசப் பாடகர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு அரங்கேறவுள்ளது.
அரசாங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் உள்ளூர் கலைத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வேண்டுகோளாகவே இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், இது கட்டணமின்றி அழைப்பிதழ் மூலமாகவே வழங்கி நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் கலை விரும்பிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், இன்றைய இளைய தலைமுறையினர் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைத்தளங்களைச் சார்ந்து இயங்குவதால், முறையான இசைப் பயிற்சிகளைப் பெறுவதில் அவசரம் காட்டுவதாகவும்,
எந்தவொரு கலைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தீவிரப் பயிற்சி அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மூத்த இசைக்கலைஞர்கள் வழிகாட்டத் தயாராக இருக்கும் நிலையில், இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் இசையைக் கற்றுக்கொண்டு எதிர்கால சந்ததிக்குக் கொண்டு சேர்க்க முன்வர வேண்டும் என இசையமைப்பாளர் கருப்பையாப்பிள்ளை பிரபாகரன் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.


