நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி சென்ற கார் மோதி விபத்து: பிணையில் விடுதலை!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு பனாகொட, மெத மண்டிய பகுதியில் நேற்று (இரவு 9:30 மணி முதல் 10:00 மணிக்கு இடைப்பட்ட காலத்தில்) இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த மோட்டார் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அத்துருகிரிய காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் இருந்த நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “திடீரென பலத்த சத்தம் கேட்டது. நான் சென்று பார்த்தபோது, காரின் முன்னால் ஒருவர் சுருண்டு விழுந்து கிடந்தார். உடனே நான் அவரை தூக்கி, பாதையில் சென்ற ஒரு வாகனத்தின் கதவை திறந்து அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்” எனக் கூறினார்.

மேலும், சம்பவ இடத்தில் உள்ள வெல்டிங் பட்டறையில் பணிபுரியும் மற்றொரு நபரும் இச்சம்பவம் தொடர்பாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.