பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான கைதுகள்: டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது என சரத் வீரசேகர குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டில் தீவிரவாதம் குறித்து முதன்முதலில் எச்சரித்தவர் ஞானசார தேரர் என்றும், அவரது கூற்றை அன்றே கவனத்தில் எடுத்திருந்தால் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறான ஒரு பௌத்த துறவியை அநியாயமாகக் கைது செய்து, அவரது சீவரத்தை அகற்றியிருப்பது மிகவும் ஆபத்தான மற்றும் கண்டிக்கத்தக்க செயலாகும். பௌத்த வினய விதிகளின்படியும் மகா நாயக்கர்களின் அனுமதியுடனும் மட்டுமே துறவி ஒருவரின் சீவரம் குறித்தான முடிவுகளை எடுக்க முடியுமே தவிர, அரச அதிகாரிகளோ அல்லது தனிநபர்களோ தன்னிச்சையாகச் செயற்பட முடியாது.

பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்பின்படி அரசின் கடமை என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் செயற்பாடுகள் பௌத்த மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், போரை வெற்றி பெற்று நாட்டிற்குப் பெரும் பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழு ஊடாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளும் கைதுகளும் அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகளாகும் என அவர் சாடினார்.

தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, தமிழ் பிரிவினைவாதிகள் மற்றும் டயஸ்போராவிடமிருந்து பெற்ற வாக்குறுதிகளை நிறைவேற்றவே இத்தகைய பௌத்த விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

நாட்டில் சிங்கள பௌத்த மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படும் சம்பவங்கள் குறித்து எச்சரித்த அவர், மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்பைத் திசைதிருப்பவே இவ்வாறான கைது நாடகங்கள் நடத்தப்படுவதாகவும், இதற்கெதிராக விரைவில் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றும் தெரிவித்தார்.