சூரிய சக்தி உற்பத்தி சாமானிய மக்களிடம் இருந்தா? அல்லது பெருநிறுவனங்களின் ஏகபோக உரிமையா? – இலங்கையின் புதிய மின்சாரக் கொள்கை குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி கடும் விமர்சனம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் சாதாரண மக்களின் பங்களிப்பைப் படிப்படியாகக் குறைத்து, அதனைச் சில பிரதான பெருநிறுவனங்களின் ஏகபோகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னிலை சோசலிசக் கட்சி (FSP) கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் இன்றையதினம் நுகேகொடையில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அக்கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் கூரைச் சூரிய சக்திப் பயன்பாட்டில் பொதுமக்கள் மற்றும் சிறு, நடுத்தர உற்பத்தியாளர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்த நடைமுறைகள் நீக்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்குச் சாதகமான சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டினார்.
முன்னர் நடைமுறையிலிருந்த நான்கு முறைகளில் Net Plus Plus முறைமை 2025 மார்ச் 17 ஆம் திகதியிட்ட சுற்றறிக்கை மூலம் ரத்து செய்யப்பட்டதுடன், Net Accounting மற்றும் Net Metering முறைகள் 2026 செப்டம்பர் 11 ஆம் திகதியிட்ட புதிய சுற்றறிக்கை மூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தற்போது Net Plus முறைமை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர் முன்வைத்த தரவுகளின்படி, இதுவரை சூரிய சக்திப் பயன்பாட்டாளர்களில் 70.2 சதவீதம் பேர் Net Accounting முறையையும், 14.0 சதவீதம் பேர் Net Metering முறையையும், 12.7 சதவீதம் பேர் Net Plus Plus முறையையும் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் வெறும் 3.1 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்திய Net Plus முறையை மட்டுமே தற்போது எஞ்சியிருக்கச் செய்வது, சாமானிய மின் உற்பத்தியாளர்களை முற்றிலும் முடக்கும் செயலாகும் என அவர் குறிப்பிட்டார்.
பகலில் கூரைச் சூரிய சக்தியிலிருந்து ஒரே நேரத்தில் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் மின்சாரக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதாக அரசாங்கம் கூறும் வாதத்தை மறுத்த அவர், பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சேமித்து இரவில் பயன்படுத்தக்கூடிய Net Plus Plus முறையை ஏன் நீக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், வீட்டுப் பாவனை மற்றும் சிறு வணிகங்களுக்கான பேட்டரிகளுக்கு (5KV முதல் 250KV வரை) 52 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், மெகாவாட் அளவிலான பெருநிறுவன பேட்டரிகளுக்கு பூஜ்ஜிய வரி சலுகை வழங்கப்பட்டிருப்பது பெருநிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமான கொள்கை என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் சாடினார்.
2013 இல் 3.35 மெகாவாட்டாக இருந்த சூரிய சக்தி உற்பத்தி, 2026 ஆகும்போது 2502 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 இல் மட்டும் அரசாங்க நிதியின்றி, பொதுமக்கள் தங்கள் சொந்த முதலீட்டில் கூரைச் சூரிய தகடுகள் மூலம் தேசிய மின்கட்டமைப்பிற்கு சுமார் 600 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்த்துள்ளனர். அதேவேளை, கொழும்பு, காலி, கம்பஹா போன்ற அதிக சூரிய சக்தி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை விடுத்து, குறைவான உற்பத்தி கொண்ட சில மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட பேட்டரி அமைப்புகளுக்கான டெண்டர் நடைமுறைகளில், ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இரு பிரதான நிறுவனங்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மக்களின் கூரைகள் மூலம் மின் உற்பத்தியைப் பெருக்கி நாட்டின் மின்சாரச் சுதந்திரத்தை உறுதி செய்வதா? அல்லது பெருநிறுவனங்களின் வியாபார லாபத்திற்காக இத்துறையைத் தாரைவார்ப்பதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கமும் மின்சார அதிகாரசபையும் தெளிவான விளக்கங்களை வழங்க வேண்டியது அவசியமாகும் எனச் செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

