அரசாங்கம் தனது “வளமான நாடு – அழகிய வாழ்க்கை” என்ற பிரதான கருப்பொருளை முற்றாக மறந்துவிட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தில் புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே ஆட்சிக்கு வந்தது. எனினும், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் பொதுமக்களின் வாழ்க்கைத்தரத்தில் எவ்வித நேர்மறை மாற்றமும் அல்லது உயர்வும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது முன்வைத்த “வளமான நாடு – அழகிய வாழ்க்கை” என்ற கவர்ச்சிகரமான உத்தியோகபூர்வ வாசகத்தை தற்போது அரசாங்கமே முற்றாக மறந்துவிட்டது என்றார்.
ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கூட இதனைப் பற்றிப் பேசுவதைக் குறைத்துக் கொண்டாலும், நாட்டின் பொதுமக்கள் மிகவும் நேரடியாகவே அரசாங்கத்திடம் இந்த வாக்குறுதி குறித்துக் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வருமான வீழ்ச்சி, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, தாங்க முடியாத அளவுக்கு தொடர்ந்து அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமை, பணவீக்கம், வேலையின்மை மற்றும் வறுமை ஆகியவை நாட்டில் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன என்றும், எனினும் இதுகுறித்து அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
அரசாங்கம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்துப் பேசும்போது, முதன்மை கணக்கு இருப்பு மற்றும் வரவு செலவுத் திட்ட உபரி ஆகிய இரு விடயங்களை மட்டுமே சந்தைப்படுத்தி வருகிறது எனத் தெரிவித்த அவர், அதற்கு அப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால முன்னேற்றம் தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்தவொரு உள்வாரி உரையாடலும் இடம்பெறவில்லை என்றார்.
கடந்த 1970களின் பிற்பகுதியிலிருந்து 2010 வரை அமைதியை ஏற்படுத்துவதும் பயங்கரவாதத்தை ஒழிப்பதுமே நாட்டில் அமைந்த அரசாங்கங்களின் முதன்மைப் பணியாக இருந்தது என்றும், ஆனால் 2024 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பிரதான பொறுப்பை ஏற்றுக்கொண்டே ஆட்சிக்கு வந்தது என்றும் அவர் நினைவூட்டினார்.
எனினும், பொருளாதார முன்னேற்றத்தை அடைய வேண்டுமாயின் முதலீட்டுத் துறை, ஏற்றுமதிப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி இலக்குகளில் புதிய பாய்ச்சல் தேவை என்பதையும், அதற்கு ஏற்ற புதிய பொருளாதார மற்றும் சட்ட மறுசீரமைப்புகள் அவசியம் என்பதையும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என சாட்டினார்.
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் மறுசீரமைப்புகளை விடுத்து, தமக்கு விருப்பமான சில அரச அதிகாரிகளின் அதிகாரங்களை அதிகரிக்கும் சட்டமூலங்களையும், அமைச்சர்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை மறைத்து வைப்பதற்கான சட்ட திருத்தங்களையுமே அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
மேலும், முதல் இரண்டு ஆண்டுகளில் மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியாத ஒரு அரசாங்கத்தால் மூன்றாவது ஆண்டில் ஒருபோதும் மக்களிடம் பிரபல்யம் அடைய முடியாது என்றும், மக்கள் தங்களது ஆணையை மீண்டும் தம் வசமாக்கிக் கொண்டு வருகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

