கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு – நீதிமன்ற சாட்சியத்தில் புதிய தகவல்கள்!

Meiveli Media Team

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்வதையோ அல்லது தடுத்து வைப்பதையோ தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மனு தொடர்பான சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதிமன்றம், அதனை முழுமையான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரிக்க உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய இரு நீதியரசர்களைக் கொண்ட குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், அரசியல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணையவழி ஊடாக வழங்கிய சாட்சியம் தொடர்பிலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்புவதே தமது கடமையாக இருந்ததாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். களத்தில் இடம்பெற்ற எந்தவொரு நடவடிக்கையிலும் தாம் நேரடியாக ஈடுபடவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஊடகவியலாளர் ஒருவர் மீதான கொலை முயற்சி தொடர்பில் இராணுவத்தின் திரிப்போலி குழுவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டமை குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, மேஜர் ஜெனரல் ஹெந்தவிதாரணவுக்கு தகவல்கள் வழங்கிய சம்பவம் நீண்ட காலத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகவும், அதனால் தற்போது அது தொடர்பான விபரங்கள் தமக்கு நினைவில் இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். எனினும், அவரது இந்த சாட்சியத்தைத் தொடர்ந்துஇ முன்னாள் ஜனாதிபதி தமக்கு கீழ் பணியாற்றிய இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகளில் இருந்து தம்மைத் தனிமைப்படுத்த முயற்சிப்பதாக சில அரசியல் மற்றும் மனித உரிமைத் தரப்புகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியம் எதிர்கால சட்ட நடவடிக்கைகளில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள் தொடர்ந்தும் நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.