“22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகிறது என்பதுதான் கேள்வி” – ஜீவன் தொண்டமான்!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதில் தமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனத் தெரிவித்த இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அந்த மாற்றம் எவ்வாறு, எந்த நடைமுறையின் ஊடாக கொண்டுவரப்படுகிறது என்பதில்தான் தமது கேள்வி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பெருமளவிலான வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், அவற்றை விரைவாக விசாரித்து முடிப்பதற்கு நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பது மட்டுமே முழுமையான தீர்வாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், தேவையான வளங்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து நிறைவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலையக மக்களின் உரிமைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், கடந்த 200 ஆண்டுகளாக பல்வேறு சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் மலையக மக்கள் படிப்படியாக முன்னேறி வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

காணி உரிமை, வீட்டுரிமை, சம்பள உயர்வு உள்ளிட்ட ஒவ்வொரு முன்னேற்றத்திற்குப் பின்னாலும் நீண்டகாலப் போராட்டம் இருப்பதாகவும், ஒரு உரிமையை வென்றெடுப்பது எவ்வளவு கடினமோ, அதனைத் தொடர்ந்து பாதுகாத்து நிலைநிறுத்துவது அதைவிடக் கடினமானது என்றும் அவர் கூறினார்.

எனவே, மக்களின் உரிமைகளையும் நீதியையும் பாதுகாக்கும் மிக முக்கியமான தூணாக நீதித்துறை இருப்பதால், அதன் சுயாதீனமும் நிலைத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லையை அதிகரிப்பதற்கு எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அதனை இந்த நேரத்தில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றீர்கள் என்பதில்தான் எனது கேள்வி இருக்கின்றது” என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், நீதித்துறை என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நம்பிக்கை வைக்கப்படும் முக்கியமான அரச நிறுவனமாகும். இன்று நீதிபதிகளின் ஓய்வு வயதெல்லை இரண்டு வருடங்களால் அதிகரிக்கப்படுகின்ற நிலையில், எதிர்காலத்தில் வேறு அரசாங்கம் அல்லது ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தால் அதே வயதெல்லையை மீண்டும் குறைப்பதற்கான வாய்ப்பும் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஒவ்வொரு அரசாங்கமும் தங்களது தேவைகளுக்கு ஏற்ப நீதித்துறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் நிலை உருவானால், அது நீதித்துறையின் நிலைத்தன்மையையும் மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும்.

“நீதித்துறை என்பது அரசாங்கங்கள் மாறும்போதெல்லாம் மாற்றப்படும் ஒரு நிறுவனமாக இருக்கக்கூடாது. நீதித்துறையின் சுயாதீனம், நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்” என இ.தொ.கா. பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.